கோலாலம்பூர்: பிகேஆர் மத்திய தலைமைக் குழுவின் (எம்பிபி) 25 உறுப்பினர்களில் 19 பேர், அதன் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி உட்பட, முன்னாள் பெரா கிளைத் தலைவர் சாகாரியா அப்துல் ஹமீட்டை பதவி நீக்கம் செய்ததை நிராகரித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பணிநீக்கம் “செல்லாது” என்று கூறியதோடு, அது முறையான செயல்முறைக்கு செல்லவில்லை என்றும் கூறியுள்ளனர்.
“2018-2021 அமர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் உச்சக்குழு உறுப்பினர்களாக நாங்கள் ஒழுக்காற்று வாரியத் தலைவர் அகமட் காசிம் அறிவித்த, சாகாரியாவின் பதவி நீக்கத்தை ஒருமனதாக நிராகரிக்கிறோம்.”
“அவர் பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு சரியானதல்ல. நீதிக்கான கொள்கைகளுக்கு இணங்கவில்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் அஸ்மினுக்கு இடையில் முரண் காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சாகாரியா பதவி நீக்கம் அதனை மேலும் மோசமடையச் செய்வதாக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பிகேஆர் சாகாரியாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு எம்ஏசிசியிடம் இருந்து கடிதம் வந்ததையடுத்து, சாகாரியா மற்றும் மற்றொரு பகாங் பிகேஆர் உறுப்பினர் இஸ்மாயில் துல்ஹாடி ஆகியோரை பிகேஆர் பதவி நீக்கம் செய்தது.
எவ்வாறாயினும், பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் தன்னை தற்காத்துக் கொள்ள அழைக்கப்படவில்லை என்று சாகாரியா கூறினார்.