Home One Line P1 துன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்

துன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்

1197
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது தந்தை துன் சாமிவேலுவின் சொத்துகளை நிர்வகிக்க டத்தோஸ்ரீ வேள்பாரி நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருப்பது தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்தியப் பிரமாண ஆவணங்களில் தனது தந்தைக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் மூளைச் செயல்பாட்டுத் திறன் 2017 முதற்கொண்டே கட்டம் கட்டமாக குறைந்து கொண்டு வந்ததாகவும், ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோயினால் தனது தந்தை பாதிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான பேராசிரியர் டேவிட் ஏமெஸ் உறுதிப் படுத்தியுள்ளதாகவும் வேள்பாரி அந்த ஆவணங்களில் தெரிவித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பை மலேசியாவின் பந்தாய் மருத்துவமனை மருத்துவர் வி.பாரதி, தனது தந்தையுடன் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்திய சந்திப்புகளின் மூலம் மறுஉறுதிப்படுத்தியுள்ளதாகவும் வேள்பாரி மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாமிவேலு ‘அல்சைமர்’ (Alzheimer’s disease) எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சொத்துகளை அவரே நிர்வகிக்கவும், முடிவுகளை எடுக்கவும் அவரது மூளைச் செயல்பாடு இடம் தரவில்லை என்றும் மருத்துவர் வி.பாரதி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், சாமிவேலுவின் மூளைச் செயல்பாட்டுத் திறனைக் கருத்தில் கொண்டு தனது தந்தையின் சொத்துகளை நிர்வகிக்க  தனக்கும் தனது வழக்கறிஞர் டத்தோ சி.விஜயகுமாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வேள்பாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

82 வயதான தனது தந்தையின் சொத்துகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது குறித்தும் தான் தெரிந்து கொள்ள விழைவதாகவும் வேள்பாரி தனது மனுவில் கோரியுள்ளார்.

தனது தந்தையைப் பிரதிநிதிக்கும் உரிமை தனக்கிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள வேள்பாரி சாமிவேலுவின் சொத்துகளை நிர்வகிக்க குழு ஒன்றை அமைத்து, அதில் தானும் இடம் பெறவேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சாமிவேலுவின் காதலியும் வழக்கு தொடுத்திருக்கிறார்

தனது தந்தையின் காதலியான (mistress) ‘மீரியம் ரோசலின் தகப்பனார் பெயர் எட்வர்ட் பால்’ (Meeriam Rosaline a/p Edward Paul) என்பவர் தனக்கும் தன் தந்தைக்கும் எதிராகவும் ஈப்போ உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் மூலம் தனது தந்தையின் உடல்நலப் பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது தந்தையிடம் இருந்து தனது சொந்த நலனுக்காக பணத்தைப் பிடுங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்றும் வேள்பாரி குற்றம் சாட்டியுள்ளார்.

“எனது தந்தை சத்தியப் பிரமாணத்தின் மூலமாகவோ, எழுத்து மூலமான, வாய்மூலமான சாட்சியங்களின் மூலமாகவோ தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நிலைமையில் இல்லை என நான் நம்புகிறேன். எனவே, மீரியம் தொடுத்துள்ள வழக்கை விசாரிக்கும் முன் எனது வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்றும் நீதிமன்றத்தை வேள்பாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

மீரியம் ரோசலின் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் அவர் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளைக் கோரியுள்ளார் என நம்பப்படுகிறது.