Home One Line P2 ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை

ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை

995
0
SHARE
Ad
இரஷியக் கொடி – கோப்புப் படம்

மாஸ்கோ – விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்தும் ஊக்கமருந்துக்கு எதிரான அனைத்லுக மன்றம் (World Anti-Doping Agency) அடுத்த 4 ஆண்டுகளுக்கு இரஷியா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், அடுத்த 2020-ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும், 2022-இல் கத்தார் நாட்டில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளிலும் இரஷியா கலந்து கொள்ள முடியாது.

இரஷியா எப்போதும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு சிறப்பான விளையாட்டாளர்களைக் கொண்டிருக்கும். இதனால் எதிர்வரும் தோக்கியோ ஒலிம்பிக்சில் போட்டித் தன்மைகள் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரஷியா இல்லாத இடத்தில் சீனாவும், அமெரிக்காவும் அதிக பதக்கங்களை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இரஷியாவில் நடத்தப்படும் போட்டிகளில் ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கும், புலனாய்வுகளுக்கும் இரஷியா ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரஷியாவுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரஷியாவின் ஊக்கமருந்துக்கு எதிரான மன்றம் இந்த முடிவை ஏற்பதாகவோ அல்லது முடிவை எதிர்த்து விளையாட்டுகளுக்கான மேல்முறையீட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திற்கு (Court of Arbitration for Sport) மேல்முறையீடு செய்வதாகவோ அடுத்த 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.