“ஐரிஷ்மேன் படம் நெட்பிலிக்சில் பார்த்துவிட்டீர்களா?”
அதற்கேற்ப இந்தப் படம் நெட்பிலிக்சில் திரையிடப்பட்ட நவம்பர் 27-ஆம் தேதி முதற்கொண்டு ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 26.4 மில்லியன் பேர்கள் பார்த்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது நெட்பிலிக்ஸ்.
இதன் மூலம் இந்த ஆண்டில் மிக அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என்ற சாதனையையும் படைத்துள்ளது, ஐரிஷ்மேன்.


3 மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடும் படம் என்பதால், இவர்களில் 70 விழுக்காட்டினர் முதல் தடவையிலேயே முழுமையாகப் பார்க்காமல் இரண்டு மூன்று தடவைகளாகப் பார்த்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரமும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் மார்ட்டின் ஸ்கோர்செசி என்ற பிரபல இயக்குநரால் பல ஆண்டுகள் திட்டமிட்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படம். 2004-இல் வெளிவந்த ‘ஐ ஹெர்ட் யு பெயிண்ட் ஹவுசஸ்’ (I Heard You Paint Houses) என்ற உண்மைச் சம்பவங்களைக் கொண்ட நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுதான் ஐரிஷ்மேன்.
நமது நாட்டின் 1எம்டிபி பணத்தைக் கொண்டு நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் மகன் ரிசா அசிஸ் எடுத்த ஹாலிவுட் படம் என்ற சர்ச்சையில் சிக்கிய ‘தி வோல்வ் ஆப் வால் ஸ்ட்ரீட்’ (The Wolf of Wall Street) என்ற படத்தின் இயக்குநரும் மார்ட்டின் ஸ்கோர்செசிதான்.


ஹாலிவுட்டின் நடிப்பு இராட்சசர்களான ராபர்ட் டி நீரோ, அல் பேசினோ இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கும் இந்தப் படத்தில் மற்றொரு இயல்பான சிறந்த நடிகரான ஜோ பெசியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சிறந்த நடிப்பும் இயக்கமும் கொண்ட படம்
படத்தின் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செசிக்கு இப்போது வயது 77. இந்த வயதிலும் கலைத் தாகம் அடங்காத அவர், இந்தப் படத்தை எடுப்பதைத் தனது கனவாகக் கொண்டு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஹாலிவுட்டின் எல்லா தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளையும் தட்டிப் பார்த்தார்.
ஏற்கனவே ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற சிறந்த இயக்குநர்தான் என்றாலும், பல வெற்றிப் படங்களைத் தந்தவர்தான் என்றாலும், இந்தப் படத்தைத் தயாரிக்க யாரும் முன்வரவில்லை!
காரணம், படத்தின் பட்ஜெட் – செலவினம் – ஏறத்தாழ 159 மில்லியன் அமெரிக்க டாலர்கள். மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 656 மில்லியன்.
கடைசியாக, நெட்பிலிக்ஸ் இந்தப் படத்தை எடுக்க ஒப்புக் கொண்டது. ஒரே ஒரு நிபந்தனை, நெட்பிலிக்சில் மட்டும் வெளியிடுவோம் என்பதுதான் அது!
கோடிக்கணக்கான பணம் போட்டு படத்தை எடுத்து நெட்பிலிக்சில் மட்டும் வெளியிடுவதுதான் அந்த நிறுவனத்தின் வணிக வியூகம். ஆனால், இதுபோன்ற பெரிய படங்களை நெட்பிலிக்சில் மட்டும் ஒளிபரப்பினாலும் ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்ற விருதுகள் வாங்க வைக்க வேண்டும் என்ற வியூகத்துடனும் செயல்படுகிறது நெட்பிலிக்ஸ்.
எப்படி என்று பார்ப்போம்!
ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்ற சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளுக்கு ஒரு படம் போட்டியிட வேண்டுமானால் அந்தப் படம் குறைந்த பட்சம் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, இரண்டுவ வாரங்களாவது ஓடியிருக்க வேண்டும் என்பது விதி.


அதன்படி, ஐரிஷ்மேன் படத்தை அமெரிக்காவில் சிறிய ஊர்களில் உள்ள சில சிறிய திரையரங்குகளில் நவம்பர் 1-ஆம் தேதி முதற்கொண்டு இரண்டு வாரங்களுக்குத் திரையிட்டு விட்டு பின்னர் நேரடியாக நெட்பிலிக்சில் நவம்பர் 27 முதல் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இதன் மூலம் ஐரிஷ்மேன் ஆஸ்கார் போன்ற அனைத்துலக திரைப்பட விழாக்களில் போட்டியிடத் தகுதி பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற வியூகத்துடன் நெட்பிலிக்சால் தயாரிக்கப்பட்ட ‘ரோமா’ (Roma) என்ற படமும் ஆஸ்கார் விருதுகள் சிலவற்றை கடந்த ஆண்டில் அள்ளியது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஐரிஷ்மேன் இன்னொரு சிறப்பு – முக ஒப்பனை
ஐரிஷ்மேன் படத்தின் இன்னொரு சிறப்பு புதிய தொழில்நுட்பத்திலான முக ஒப்பனை.
மார்ட்டின் ஸ்கோர்செசியின் ஆதர்ச நண்பர் ராபர்ட் டி நீரோ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அல் பேசினோ. இருவருமே முதுமையானவர்கள். ராபர்ட் டி நீரோவுக்கு 76 வயது. அல் பேசினோவுக்கு 79. மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோ பெசிக்கும் வயது 76.
அதாவது, நமது கமல்ஹாசன் அவ்வை சண்முகி, இந்தியன் போன்ற படங்களில் பயன்படுத்திய ‘புரோஸ்தெடிக்’ ரக ஒப்பனையல்ல ஐரிஷ்மேன் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.
ராபர்ட் டி நீரோ, அல் பேசினோ, ஜோ பெசி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் அவர்களின் முக ஒப்பனையை கணினி மூலம் திரையிலேயே திருத்தம் செய்து அதன்மூலம் அவர்களின் இளமைத் தோற்றத்தைக் கொண்டு வருவதுதான் இந்தப் புதிய தொழில்நுட்பம்.
அதன்படி பல காட்சிகளில் இயல்பாக, நம்ப முடியாத அளவுக்கு இளமைத் தோற்றத்துடன் ஐரிஷ்மேன் படத்தில் இந்த 70-ஐக் கடந்த நடிகர்கள் தோன்றுகிறார்கள்.
முதல் கட்டமாக படம் கோல்டன் குளோப் போட்டியில், சிறந்த படம் உள்ளிட்ட ஐந்து விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, ஐரிஷ்மேன்.
அடுத்து ஆஸ்கார் போட்டிகளில் எத்தனை விருதுகளை அள்ளப் போகிறது, சிறந்த இயக்குநர் விருதை மார்ட்டின் ஸ்கோர்செசி இரண்டாவது முறையாகப் பெறுவாரா, சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை ராபர்ட் டி நீரோ, அல் பேசினோ, ஜோ பெசி கூட்டணியில் யார் பெறப் போகிறார், சிறந்த படமாகத் தேர்வு பெறுமா என்பது போன்ற கேள்விகள் தற்போது அனைத்துலக சினிமா வட்டாரங்களில் உலா வருகின்றன.