கோலாலமபூர்: விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்தன் பேரில் தலைமை நிறுவன அதிகாரியான எஸ்.சந்துருவின் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று திங்கட்கிழமை அமர்வு நீதிமன்றம் மாற்றியது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 177ஏ பிரிவின் கீழ் வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு துணை அரசு வழக்கறிஞர்கள் முகமட் இஜானுடின் அலியாஸ் மற்றும் அலிப் அஸ்ராப் அனுவார் ஷாருடின் ஆகியோர் விண்ணப்பத்தை வழங்கிய பின்னர் நீதிபதி அகமட் சசாலி உமார் இந்த முடிவை எடுத்தார்.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) பிரிவு 13-இன் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று முகமட் இஷானுடின் தனது சமர்ப்பிப்பில் தெரிவித்தார்.
தமது கட்சிக்காரருக்கு மேலும் ஒரு வழக்கு மலாக்கா அமர்வு நீதிமன்றத்தில் உள்ளதால், இவ்வழக்கு மலாக்கா உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று, எஸ்.சந்துருவின் வழக்கறிஞர் மெல்வின் டாய் கூறினார். அதனையடுத்து, நீதிமன்றம் இவ்வழக்கினை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது.
சந்துரு ஒரு கருப்பு சாம்சோங் கேலக்ஸி ஏ10 கைபேசியில், எண்.15, லாட் 1802, கம்போங் புக்கிட் பாலாய் எனும் இடத்தில், அக்டோபர் 12-ஆம் தேதி காலை 10.20 மணிக்கு விடுதலைப் புலிகள் சம்பந்தமானப் பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து, கடந்த அக்டோபர் 29-ஆம்தேதிஅவர் குற்றம் சாட்டப்பட்டார்.