Home One Line P2 அரசியல் பார்வை : நாடாளுமன்ற வாக்கெடுப்பில் டிரம்ப் தலை தப்புமா?

அரசியல் பார்வை : நாடாளுமன்ற வாக்கெடுப்பில் டிரம்ப் தலை தப்புமா?

815
0
SHARE
Ad

(அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நம்பகத்தன்மை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் அடுத்து  என்ன நடக்கப் போகிறது? என்ன நடக்கலாம்? சட்ட சிக்கல்கள் என்ன? என்பது குறித்து தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செனட் எனப்படும் மேலவையின் நடைமுறைகளும், சட்ட வரையறைகளும் குழப்பமானவை, எளிதில் சாமானியர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதவை!

அதே போன்றுதான் அமெரிக்க அதிபருக்கான உரிமைகள், சலுகைகள், பாதுகாப்புகள், தற்காப்புகள் குறித்த விவகாரங்களும்!

#TamilSchoolmychoice

அதனால்தான் டொனால்ட் டிரம்ப் கடந்த பல்லாண்டுகளாக தனது வருமான வரி குறித்த விவரங்களை வெளியிட மறுத்து சட்ட ரீதியாக அதற்குப் பாதுகாப்பும் தேடிக் கொள்ள முடிகிறது. அதிபராகி ஆண்டுகள் மூன்று கடந்து விட்டாலும், இன்னும் அவரது வருமான வரி விவரங்களை வெளியிட வைக்க நீதிமன்றங்களில் நடந்து வரும் சட்டப் போராட்டங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.

கேப்பிட்டல் ஹில் என்று அழைக்கப்படும் – அமெரிக்க நாடாளுமன்றம்

ஆனால், உக்ரேன் நாட்டுடன் நடந்த வெளியுறவு நடப்புகள் குறித்த விவகாரத்தில் டிரம்ப் சரியாக மாட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக விசாரணைகளைத் தொடக்கிய ஜனநாயக நாடாளுமன்ற விசாரணைக் குழு அவருக்கு எதிராக இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்துள்ளது.

முதலாவது தீர்மானம் டிரம்ப் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம் சுமத்துகிறது. இரண்டாவது தீர்மானம் காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நடைமுறைகளில் தடைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

முன்னாள் அமெரிக்கத் துணையதிபரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜோ பிடனுக்கு எதிராக உக்ரேன் அரசாங்கம் புலனாய்வுகளைத் தொடக்க டிரம்ப் நெருக்குதல் தந்தார் என்பதாலும், உக்ரேன் அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், உக்ரேன், வெள்ளை மாளிகையுடனான சந்திப்புகளை நடத்த முடியாது என்றும், அதற்கு இராணுவ உதவிகளை வழங்க முடியாது என்றும் டிரம்ப் நிபந்தனைகள் விதித்தார் என்பதாலும், அவர் அதிகார விதிமீறல்களைச் செய்தார் என முதல் தீர்மானம் விவரிக்கின்றது.

முல்லர் என்பவரின் அறிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த உண்மைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற நீதி விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு இடையூறுகள் செய்தது, சாட்சிகள் அரசாங்க இலாகாக்களுடனான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது என நெருக்குதல்கள் தந்தது, சாட்சியம் அளிக்க அழைப்புகள் அனுப்பப்பட்ட சாட்சிகளிடம் அந்த அழைப்புகளைப் புறக்கணியுங்கள் என நெருக்கடிகள் தந்தது என பல முனைகளிலும் நாடாளுமன்ற விசாரணைக்கு டிரம்ப் இடையூறுகள் ஏற்படுத்தினார் என்ற காரணத்தினால் இரண்டாவது தீர்மானம் வரையப்பட்டுள்ளது.

ஏன் இந்தத் தீர்மானங்கள்?

டிரம்புக்கு எதிராக தீர்மானங்களை அறிவிக்கும் நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி – உடன் நாடாளுமன்ற நீதிவிசாரணைக் குழுவினர்

அமெரிக்க அதிபருக்கு வானளாவிய அதிகாரங்களை அமெரிக்க அரசியல் அமைப்பு தந்திருந்தாலும், ஓர் அதிபர் தவறாக நடவடிக்கைகளை எடுக்கும்போது அல்லது சட்டத்துக்கு முரண்பாடாக நடந்து கொள்ளும்போது, என்ன நடவடிக்கை எடுப்பது என்பதற்கான சட்டங்களையும் அமெரிக்க அரசியல் அமைப்பு குறிப்பிடுகிறது.

முதலாவதாக, இதற்கான விசாரணைகள் நாடாளுமன்றக் குழுவால் விசாரிக்கப்பட்டு அதிபரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகியிருக்கிறதா என்பது முடிவு செய்யப்படும். இதற்கு ‘இம்பீச்மெண்ட்’ (impeachment) என்று பெயர்.

நீதிமன்ற வழக்குகளில் ஒரு சாட்சி தனது சாட்சியத்தை முதலில் ஒருவாறாகக் கூறிவிட்டு, பின்னர் மாற்றிக் கூறினால், அந்த சாட்சியின் வாக்குமூலத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் அந்த சாட்சியின் நம்பகத்தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவிப்பார்கள்.

அதே போன்ற நடைமுறைதான் இப்போது டிரம்புக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதும்! அதிபர் என்ற முறையில் அவர் நியாயமாகவும், சட்டபூர்வமாகவும் செயல்படுகிறார் என்பதில் நம்பகத்தன்மை இல்லை என இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்கள்.

விசாரணைகளை நடத்தி டிரம்ப் மீதான மேற்கூறப்பட்ட இரண்டு தீர்மானங்களை வடிவமைத்திருக்கும் நீதி விசாரணைக் குழு இந்த வாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முழு வாக்கெடுப்புக்கு அந்த தீர்மானங்களை முன்வைக்கவிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றமும் அந்தத் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானங்கள் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால்  அதன்பின்னர் அமெரிக்க செனட் மன்றத்திற்கு – அதாவது நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பப்படும்.

நம்பகத்தன்மை தீர்மானங்களை எதிர்நோக்கும் மூன்றாவது அதிபர் டிரம்ப்

இரண்டு தீர்மானங்களில் ஒன்று வெற்றி பெற்றால்கூட போதும், டிரம்புக்கு எதிரான விசாரணைகள் அடுத்து, செனட் மன்றத்தில் நடத்தப்படும்.

செனட் நடைமுறையின்படி, அங்கு மீண்டும் டிரம்ப் அதிகார விதிமீறல்களை செய்தாரா, நாடாளுமன்ற நடைமுறைக்கு இடையூறுகள் ஏற்படுத்தினாரா என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தீர்மானங்களின்படி டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்படலாமா என்ற முடிவு எடுக்கப்படும்.

அவ்வாறு நடந்தால் இத்தகைய இம்பீச்மெண்ட் நடைமுறைகளை எதிர்நோக்கும் மூன்றாவது அதிபராக டிரம்ப் வரலாற்றில் இடம் பெறுவார்.

இதுவரை அமெரிக்க அதிபர்களுக்கு எதிராக மூன்று இம்பீச்மெண்ட் நடைமுறைகளை அமெரிக்க நாடாளுமன்றம் கண்டுள்ளது. முதலாவது 1868-இல் அதிபர் அண்ட்ரூ ஜோன்சனுக்கு எதிராக நடைபெற்றது. அதில் செனட் மன்றத்தில் ஒரே வாக்கு வித்தியாசத்தில் நம்பகத்தன்மை குறித்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன.

ரிச்சர் நிக்சன் – பில் கிளிண்டன் – டொனால்ட் டிரம்ப்

அடுத்து இரண்டாவதாக 1974-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது இதே போன்ற இம்பீச்மெண்ட் தீர்மானங்கள். அந்தத் தீர்மானங்கள் வாக்கெடுப்பு விடப்படும் முன்னரே நிக்சன் தனது பதவியிலிருந்து விலகினார்.

மூன்றாவதாக, 1998-இல் மோனிகா லிவின்ஸ்கியுடனான பாலியல் தொடர்பு காரணமாக அப்போதைய அதிபர் பில் கிளிண்டனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள். இதில் செனட் மன்றத்தில் விடப்பட்ட வாக்கெடுப்பில் கிளிண்டன் அதிபராகத் தொடரலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆக, இதுவரையில் அமெரிக்க அதிபர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பகத்தன்மைகள் குறித்த இம்பீச்மெண்ட் தீர்மானங்களின்படி ஒரே ஓர் அதிபர்தான் பதவி விலகியிருக்கிறார். அவர்தான் நிக்சன். அவர்கூட வாக்கெடுப்பை எதிர்நோக்காமல் அதற்கு முன்பே பதவி விலகினார்.

முடிவாக, இந்த நம்பகத்தன்மை குறித்த தீர்மானங்கள் பயணம் செய்யும் நடைமுறைகளின் வழி இரண்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒன்று அதிபர் தவறு செய்திருக்கிறாரா என்பது அடுத்து இரண்டாவது, அந்தத் தவற்றின் மூலம், அவர் அதிபராகப் பதவியைத் தொடர்வதற்கான தகுதியை இழக்கிறாரா என்பது!

பில் கிளிண்டன் நிலைமையும் இதுதான். வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த மோனிகா லிவின்ஸ்கியுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்தார் – அது தவறு என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாலும் – அவர் அதிபராகத் தொடரலாம் – என்ற முடிவை செனட் மன்றம் எடுத்தது.

இப்போது டிரம்புக்கு எதிரான தீர்மானங்கள் நாடாளுமன்றத்தை இந்த வாரத்தில் கடந்து செனட் மன்றத்திற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கிறஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து, ஜனவரி தொடக்கத்தில் செனட் மன்றம் டிரம்ப் மீதான விசாரணைகள் தொடரும்.

அப்போதுதான் டிரம்ப் அதிபராகத் தொடர முடியுமா? தீர்மானங்களின்படி அதிபர் பதவியிலிருந்து விலகுவாரா?

என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியும்!

-இரா.முத்தரசன்