பாக்தாத் – ஈராக், சிரியா மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, நேற்று செவ்வாய்க்கிழமையும், இன்று புதன்கிழமையும் நூற்றுக்கணக்கான போராளிக் குழுக்கள் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தூதரகத்தின் சுற்றுச் சுவர்களின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற முற்பட்டதாலும், போராட்டவாதிகளின் செயல் எல்லை மீறியதாலும் தூதரகத்தின் பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
கண்ணீர் புகைக் குண்டுகளையும், இரப்பர் குண்டுகளையும் கொண்டு அமெரிக்கத் தூதரக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கத் தொடங்கினர் என ஊடகங்கள் தெரிவித்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தை நோக்கிக் கற்களையும் வீசினர். தூதரகத்தின் வாயில்களில் அமைந்துள்ள பாதுகாப்பு முகப்பிடங்களுக்கும் சுற்றுச் சுவர்களுக்கும் தீ வைக்கவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டனர்.
தூதரகத்தின் முன் இருந்த இடங்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதற்கிடையில் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுமார் 4 ஆயிரம் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரை அமெரிக்க தற்காப்புத் துறை தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களை ஈரான் தூண்டி விடுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.