கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜி.சாமிநாதனின் பிணைக்கான முறையீட்டைக் கருத்தில் கொள்வதற்கான உரிமை தொடர்பாக மற்றொரு உயர்நீதிமன்ற தீர்ப்புடன் கட்டுப்படுவதாக இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனின் விண்ணப்பத்தை விசாரிப்பதற்கான விசாரணையின் போது நீதிபதி அகமட் ஷாஹிர் முகமட் சால்லே இந்த முடிவை எடுத்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில், மற்றொரு உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி, சொஸ்மா என்றும் அழைக்கப்படும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, நீதிமன்றத்தின் ஜாமீன் அதிகாரத்தை இரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார். அந்தத் தீர்ப்பு மற்றொரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் தானும் அதைப் பின்பற்றுவதாக இன்றைய வழக்கில் நீதிபதி அகமட் ஷாஹிர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததாகக் கூறி 12 பேர் கைது செய்யப்பட்டதில், சாமிநாதனும் அவர்களில் அடங்குவார்.
சாமிநாதனுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று கோரி இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணைகள் முடிந்த பின்னர் அதற்கான தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி பிற்பகலில் தான் வழங்கவிருப்பதாக நீதிபதி அறிவித்தார்.