கோயம்புத்தூர் – சீனாவில் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்துள்ள கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவிலும் இதுகுறித்த அச்சம் ஏற்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சீனாவிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தடைந்த 8 தமிழர்கள் உடனடியாகப் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரொனாவைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அடுத்த 28 நாட்களுக்கு அவர்கள் வெளியில் எங்கும் செல்லக் கூடாது என அவர்களுக்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ஒருக்கால் அவர்களுக்கு கொரனாவைரஸ் தொத்து இருந்தால் மற்ற இடங்களுக்கு செல்லும்போது அது பரவக் கூடும் என்ற அச்சம் இருப்பதால் அவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவனையில் வந்து சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வுஹான்மாநிலத்தில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
கொரொனாவைரஸ் பாதிப்பால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் 976 பேர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.