மைசூர் – “மேன் வெர்சஸ் வைல்ட்” (Man Vs Wild) என்பது பேர் கிரில்ஸ் எனப்படும் காட்டுவள ஆராய்ச்சியாளர் தொலைக்காட்சியில் படைக்கும் புகழ்பெற்ற ஆவணப் படத் தொடராகும். காட்டுவளங்கள், காட்டு விலங்குகள் குறித்து தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்து புகழடைந்தவர் பேர் கிரில்ஸ்.
அவ்வப்போது சில பிரபலங்களை இணைத்துக் கொண்டு, காட்டு வளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார் கிரில்ஸ். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துக் கொண்டு அசாம் காடுகளுக்குள் சென்று ஒரு சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் படைத்தார் கிரில்ஸ்.
தற்போது தனது புதிய ஆவணப் படத்தில் கிரில்சோடு இணையும் பிரபலம் நடிகர் ரஜினிகாந்த்.
நேற்று திங்கட்கிழமை காலை (ஜனவரி 27) காட்டுவளம் குறித்த இந்த ஆவணப் படத்தில் நடிக்க தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் மைசூருக்கு அருகிலுள்ள பாண்டிபூர் என்ற ஊருக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.
அங்குதான் இந்த காட்டுவளம் குறித்த பேர் கிரில்சின் ஆவணப்படம் தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அந்த விமானப் பயணத்தின்போதுதான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரது விமானப் பயணம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகியிருக்கிறது.
அதன் பின்னர் அவர் பெங்களூரு சென்று அங்கிருந்து பாண்டிபூர் சென்றடைந்திருந்திருக்கிறார். அங்கு இரண்டு நாட்களுக்கு காட்டுவிலங்குகள் குறித்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
தற்போது ஹைதராபாத் நகரில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் ரஜினி, பொங்கல் திருநாளின்போது தனது “தர்பார்” திரைப்பட வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார்.
அவரது தர்பார் வெற்றிகரமாகத் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த சமயத்தில் துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் சர்ச்சைகளை எழுப்பியது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் தீவிரமாகப் பங்கேற்று நடித்து வரும் ரஜினிகாந்த், இதற்கிடையில்தான் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் படத்திற்காக காட்டுப் பகுதியில் நடிக்க இரண்டு நாட்களை ஒதுக்கியிருக்கிறார்.
அடிக்கடி, இமாலய மலைப் பகுதிகளுக்கு செல்லும் ரஜினிகாந்தின் ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் காட்டு வளம், காட்டு விலங்குகள் குறித்த அவரது ஆர்வம் அவ்வளவாக வெளியில் தெரியப்படுத்தப்பட்டதில்லை.
பேர் கிரில்ஸ் ஆவணப் படத்தின் மூலம் ரஜினிகாந்தின் காட்டுவளம் மற்றும் காட்டு விலங்குகள் குறித்த பார்வையும், கருத்துகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.