கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கு விசாரணை இந்த வாரம் தொடங்கியிருக்கும் நிலையில், அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கியிருந்த மருத்துவர் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இன்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து நீதிபதியின் முன் தெரிவித்த ஜக்ஜிட் சிங் இதை அனுமதிக்க முடியாது என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் அந்த மருத்துவ விடுப்புச் சான்றிதழ் உண்மையானதா என்பதை நிரூபிப்பதுதான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நோக்கம் எனத் தற்காத்து வாதாடினார்.
நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது, மாறாக அந்த மருத்துவர் தான் மிரட்டப்படுவதாக எண்ணினால் தாராளமாக காவல் துறையில் புகார் செய்யலாம் என்றும் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உடல் நலக் குறைவு என்று கூறப்பட்டாலும் இன்றைய நீதிமன்ற விசாரணையில் ரோஸ்மா கலந்து கொண்டார்.
அரசாங்கத் திட்டங்களைக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக மில்லியன்கணக்கான பணத்தைக் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோஸ்மா மீதான வழக்கு தொடரப்பட்டுள்ளது.