கோலாலம்பூர்: 1.25 பில்லியன் சோலார் ஹைபிரிட் என்னும் சூரிய ஒளி மின் ஆற்றல் திட்ட வழக்கில் மூத்த துணை அரசு வழக்கறிஞராக டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், 2018ஆம் ஆண்டு முதல் அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் ரத்து செய்யக்கோரியும் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தாக்கல் செய்த மனு ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியாரான ரோஸ்மா மன்சோர் (வயது 70) ஏற்கனவே இதுபோன்ற விண்ணப்பத்தை சமர்ப்பித்து அந்த விசாரணையில் தோல்வியடைந்தார். கூட்டரசு நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தும் ரோஸ்மாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் அவர் சமர்ப்பித்திருக்கும் இந்த விண்ணப்பம் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் கமால் முகமட் ஷாஹித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ரோஸ்மா தனது ஆகக் கடைசியான விண்ணப்பத்தில், ஜூலை 8, 2020, மே 11 மற்றும் மே 21, 2021 தேதியிட்ட மூன்று நியமனக் கடிதங்கள் மூலம் ஸ்ரீ ராமை மூத்த துணை அரசு வழக்கறிஞராக நியமித்தது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியிருக்கிறார்.
இந்த விண்ணப்பம் எதிர்வரும் ஜூலை 6-ஆம் தேதி விசாரிக்கப்படும். அதற்கடுத்த நாள் ஜூலை 7-ஆம் தேதி ரோஸ்மாவின் சோலார் ஹைபிரிட் வழக்கில் அவர் குற்றமற்றவரா அல்லது அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு எதிர்வாதம் செய்ய வேண்டுமா என்ற தீர்ப்பை நீதிபதி வழங்கவிருக்கிறார்.