Home நாடு நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்

நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்

595
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 19-ஆம் தேதி வரையும், ஆகஸ்ட் 22 முதல் 26 வரையும் 10 நாட்களை கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது.

இதற்கிடையில் இந்த மேல்முறையீட்டில் தனக்காக வாதாட குயீன்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன் வழக்கறிஞர் ஜோநாதன் லேய்ட்லா (Jonathan Laidlaw) என்பவரை நியமிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தை நேற்று வியாழக்கிழமை (ஜூன் 16) கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி அகமட் ஃபாரிட் வான் சாலே, இந்த வழக்கிலிருந்து தானே முன்வந்து
விலகிக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

காரணம், அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அதே கட்சியைச் சேர்ந்தவர் எனவும், ஒரு தொகுதியின் தலைவர் எனவும் நீதிபதி அகமட் ஃபாரிட் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது முடிவை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

“சுதந்திரமான நீதித் துறை ஒரு சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் தலையீடுகள் இருக்கக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதிபதிகள் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் நான் நீதிபதியாக செயல்பட்டால், அதில் முரண்பாடுகள் இருப்பதாகப் பார்க்கப்படும்.  நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் கருத்து சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது. எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, எந்த தரப்பினரும் கோரிக்கை விடுக்கவில்லை என்றாலும்,
நானே முன்வந்து இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று நீதிபதி மேலும் கூறினார்.

இதற்கிடையில் நேற்றைய விசாரணையில் இருந்து விலகிக் கொண்ட நீதிபதி அகமட் ஃபாரிட் வான் சாலே ஃபரித் ஒரு காலகட்டத்தில் செனட்டராக இருந்ததோடு,
உள்துறை துணை அமைச்சராகவும் இருந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன.

எனினும், நீதித்துறையில் இணைவதற்கு முன்னர் அவர் அம்னோவிலிருந்தும் மற்ற பதவிகளில் இருந்தும் விலகிக் கொண்டார் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

நீதிபதி அகமட் ஃபாரிட் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை அனுமதிக்கக் கோரும் நஜிப்பின் விண்ணப்பம் மீதான வழக்கு விசாரணை மற்றொரு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான அகமட் கமால் முகமட் ஷாஹித் முன்னிலையில் வழக்கு நிர்வாகத்திற்காக நிர்ணயிக்கப்பட்டது.