கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட 2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி வழக்கு விசாரணை மார்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்னணி தலைமை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெரா அனுமதித்திருந்தார்.
முன்னதாக நேற்று நஜிப்பின் 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் போது, ஷாபி நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலியிடம், செக்ராவுக்கு முன் 2.28 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1எம்டிபி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்படும் என அறிவித்தார்.
இந்த வாரம் பிப்ரவரி 20-ஆம் தேதி தனது மகன் திருமணம் செய்துகொள்வதாலும், கோலாலம்பூரில் நடைபெறும் திருமண ஏற்பாடுகளில் அவர் பங்கேற்க வேண்டும் என்பதாலும் இந்த விண்ணப்பம் செய்யபட்டதாக ஷாபி தெரிவித்தார்.
அவரது மகன் முகமட் பார்ஹானும் ஒரு வழக்கறிஞராக இருக்கிறார். மேலும் பெரும்பாலும் அவரது தந்தையுடன் அவர் காணப்படுவார்.
நஜிப்பிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 9.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டுகளை ஷாபி எதிர்கொள்கிறார்.