மலாக்கா: முகமட் ராபீக் நைசமொகிதின் (பாயா ரும்புட்) மற்றும் நூர் எபாண்டி அகமட் (தெலுக் மாஸ் ) ஆகிய இரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை மலாக்கா தேசிய முன்னணி இரத்து செய்துள்ளது.
இருப்பினும், ஜசெக மற்றும் பிகேஆரில் இருந்து வெளியேறிய நோர்ஹிசாம் ஹசான் பாக்தி (பெங்காலான் பத்து) மற்றும் முகமட் சைய்லானி (ரெம்பியா) உட்பட 15 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய முன்னணி பாதுகாப்பாக உள்ளதாக அது தெரிவித்துள்ளது.
எளிய பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி தயாராகி உள்ளது.
இன்று வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மலாக்கா தேசிய முன்னணி தலைவர் அப்துல் ராவூப் யூசோ, கடந்த வாரம் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு பெர்சாத்து வெளியேறுவதை அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய ஒத்துழைப்பு குறித்து சந்தித்து விவாதிக்க ராபீக் மற்றும் நூர் எபாண்டி ஆகியோரை அழைத்ததாக தெரிவித்தார்.
இருப்பினும், இன்றுவரை அவர்கள் சந்திக்கத் தவறிவிட்டதாக ராவூப் விளக்கினார்.
“இந்த ஒத்துழைப்பை தொடர்வதற்கான நம்பிக்கையை மலாக்கா தேசிய முன்னணி இழந்துள்ளது” என்று அவர் கூறினார்.
“எனவே, 13 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி அமைப்பர். 15 உறுப்பினர்களின் பெரும்பான்மையை தேசிய முன்னணி ஆளுநரிடம் விரைவில் அறிவிக்கும்” என்று அவர் கூறினார்.