Home One Line P1 கொவிட்-19: வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை அழைத்து வருவதற்கான செலவுகளை மஇகா ஏற்கிறது!

கொவிட்-19: வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை அழைத்து வருவதற்கான செலவுகளை மஇகா ஏற்கிறது!

635
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமானப் பயண செலவுகளை மஇகா ஏற்க உள்ளது.

வெளியுறவு அமைச்சக முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் இந்த விஷயத்தை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் அனைவரையும் மலேசியா ஏர்லைன்ஸ் விமான சேவையின் சிறப்பு விமானமான ஏர்பஸ் 332 மூலம் நாட்டிற்கு அழைத்து வருவோம்.”

“இப்போதைக்கு, வங்காளாதேச அரசு, டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து விமானம் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் சிறப்பு அனுமதி வழங்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது” என்று அவர் கூறினார்.

ஹிஷாமுடினின் கூற்றுப்படி, வங்காளதேசத்தில் மொத்தம் 367 மலேசியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 219 பேர் மாணவர்கள் என்றும் தெரிவித்தார். காக்ஸ் பஜாரில் உள்ள மேடான் மலேசியா மருத்துவமனையின் 55 ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 73 தொழிலாளர்கள், மற்றும் வங்காளதேசத்தில் உள்ள மலேசிய தூதரகத்தின் 20 அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.

இவர்களில் 270 பேர் நாட்டிற்கு திரும்ப ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் ஏழு அரசு ஊழியர்கள் வங்காளதேசத்தில் உள்ள மலேசிய தூதரகத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

“அரசாங்கத்தின் சார்பாக, அவர்கள் நாட்டிற்கு செய்த சேவைக்காக அவர்கள் அங்கேயே இருக்க ஒப்புக் கொண்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சுமார் 1,500 மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆறு சிறப்பு விமானங்களுக்கு மஇகா நிதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 696 மலேசியர்கள் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்.