புதுடில்லி – சிறப்பு விமானங்களின் மூலம் கோலாலம்பூர் திரும்ப முற்பட்ட 18 மலேசியர்கள் இந்திய அரசாங்க அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுடில்லியில் 8 பேர்களும், சென்னையில் 10 பேர்களும் இதுவரையில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டு அதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிசாமுடின் நிகழ்ச்சியில் சுமார் 9 ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டு அதில் பலர் தங்களின் பூர்வீக இந்திய மாநிலங்களுக்குத் திரும்பியதன் மூலம் இந்தியாவில் கொவிட்-19 பரவுதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இதற்கிடையில், புதுடில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மலேசியர்களில் ஒருவர் காணொளி மூலம் வெளியிட்ட செய்தியின்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், கொசுத்தொல்லைகள் அங்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உணவும் சுகாதாரமும் மோசமான முறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் கருத்துரைத்த வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன், இந்த விவகாரத்தைத் தான் அறிந்துள்ளதாகவும், மேல் நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.