Home One Line P2 கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 8,492 – ஒரே நாளில் 1331 பேர்கள் –...

கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 8,492 – ஒரே நாளில் 1331 பேர்கள் – நியூயார்க்கில் மட்டும் 630 பேர்கள்

689
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவில் இன்னும் நிறைய மரணங்கள் நிகழப் போகின்றன என அமெரிக்க அதிபர் நேற்று எச்சரித்திருக்கும் நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 4) மட்டும் ஒரே நாளில் 1,331 பேர்கள் கொவிட்-19 பாதிப்புகளால் மரணமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இதுவரையில் கொவிட்-19 பாதிப்புகளால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,492 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா முழுவதும் இதுவரையில் 311,658 பேர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் அமெரிக்காவில்தான் நிகழ்ந்திருக்கின்றன.

கொவிட்-19 பிரச்சனைகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகளும், வெளியிட்டு வரும் கருத்துகளும் பலத்த கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கின்றன.

அமெரிக்க மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருத்துவ பாதுகாப்பு உபரணங்கள் இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நியூயார்க் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 630 பேர்கள் மரணமடைந்துள்ளனர். நியூயார்க்கில் இதுவரையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 3,565-ஐத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் மரண எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் பாதிப்புகளில் முன்னணி வகிக்கும் அமெரிக்கா அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஸ்பெயினை விட 3 மடங்கு பாதிப்புகளைக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130,759 ஆக இருக்கிறது.

உலக அளவில் மரண எண்ணிக்கையில் இத்தாலி இன்னும் முதலிடத்தில் இருக்கிறது. 15,362 பேர்கள் இதுவரையில் இத்தாலியில் மரணமடைந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில் இதுவரையில் 11,947 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

மரண எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

வீட்டுக்குள்ளேயே இருக்கும் கட்டுப்பாட்டை அமெரிக்கர்கள் ஒழுங்காகப் பின்பற்றாவிட்டால் மரண எண்ணிக்கை 100,000 முதல் 240,000 வரை உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.