கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இரத்த வங்கி (பிபிஐஎம்) தேவைப்படும் நோயாளிகளுக்கு போதுமான இரத்த விநியோகத்தை உறுதி செய்வதற்காக இரத்த தானம் செய்யுமாறு மக்களை அழைத்துள்ளது.
கொவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவமனையின் இரத்த வழங்கல் படிப்படியாகக் குறைந்து வருகிறது எனவும், கூடுதலாக கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் மோசமான நோயாளிகளுக்கு இது அவசியமென்றும் அது தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து இரத்த வழங்கல் அதிகரிப்பதற்கான தடைகளை சுகாதார அமைச்சகம் கடந்த திங்களன்று ஒப்புக் கொண்டது.
குறிப்பாக ரம்லான் மாதத்தில் விநியோக பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற்றும் தேசிய இரத்த மையம் (பிடிஎன்) ஆகியவற்றில் இரத்த தானம் செய்யலாம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்ட 12 நோயாளிகள் கொவிட்-19 நோயாளி சிகிச்சை ஆய்வில் பயன்படுத்த தங்கள் இரத்த பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்ததாக அவர் கூறினார்.
இரத்த தானம் செய்ய விரும்புவோர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாற்று மருத்துவத் துறை, பிபிஐஎம் பிரதான கட்டிடத்தில் கலந்து கொள்ளலாம்.