புத்ரா ஜெயா – நடமாட்டக் கட்டுப்பாடு மீதான தளர்வுகள் அவசர கதியில் மேற்கொள்ளப்படுவதாக மக்களிடத்தில் சலசலப்புகள் எழுந்திருக்கும் வேளையில் 9 மாநிலங்கள் தளர்வுகளை அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியிருக்கின்றன.
கெடா, சபா, பகாங், பினாங்கு, கிளந்தான், சரவாக் ஆகிய 6 மாநிலங்கள் தளர்வுகளை அமுல்படுத்தப் போவதில்லை என அறிவித்திருக்கின்றன. சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்கள் சில வணிகங்களுக்கு மட்டுமே மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும் உணவகங்களில் உள்ளே அமர்ந்து உணவருந்துவது, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளன.
இதுகுறித்துக் கருத்துரைத்த கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் “அரசாங்கத்தின் நோக்கத்தை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். பொருளாதார மீட்சி முக்கியம்தான். ஆனால் மீண்டும் அதிக அளவில் தொற்று பரவாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். மனித உயிர்கள் மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கள் தங்களின் அமுலாக்க நடவடிக்கை இயந்திரங்களை முதலில் முடுக்கி விட்டு, தயார் நிலையில் வைத்துக் கொண்டு அதன் பின்னரே கட்டம் கட்டமாக தளர்வுகள் செயல்படுத்தப்படும் என பெரும்பாலான மாநிலங்களின் மந்திரி பெசார்கள் தெரிவித்துள்ளனர்.