புத்ராஜெயா – நாளை மே 4-ஆம் தேதி முதல் கொவிட்-19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மீதிலான சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இது அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுபோல் தோன்றுகிறது என கேள்விகளும், கண்டனக் கணைகளும் எழுப்பப்பட்டிருக்கின்றன.
மே 12 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என அறிவித்துவிட்டு, அதற்குள்ளாக மே 4-ஆம் தேதியே தளர்வுகள் அறிவிக்கப்படுவது ஏன் என்பதற்கான நியாயமான விளக்கம் வழங்கப்படவில்லை.
எம்டியுசி எனப்படும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரசும் இவ்வாறு அவசரப் போக்கு காட்டப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தி அவர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே தொழில்கள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என எம்டியுசி பொதுச் செயலாளர் ஜோசப் சோலமன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் கூறியிருக்கும் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, சில நாடுகளில் இரண்டாம் கட்டமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டதால் தொற்று கூடுதலாக பரவியது என்றாலும், அந்த நாடுகளில் வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்பட்டதால்தான் அவ்வாறு நிகழ்ந்தது என்று கூறியிருக்கிறார்.
மலேசியாவில் வெளிநாட்டுப் பயணிகள் நேரடியாக அனுமதிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்படுவதால் இங்கு அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்றும் சப்ரி நம்பிக்கை அளித்திருக்கிறார்.
ஆனால், நேற்று மட்டும் திடீரென கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்திருப்பதும் மக்களிடையே நிலவும் அச்சத்தை நீடிக்கச் செய்திருக்கிறது.
எனவே, பச்சை மண்டலப் பகுதிகளை முதலில் அறிவித்து விட்டு அந்தப் பகுதிகளில் மட்டும் முதலில் தளர்வுகளை அமுல்படுத்துவதுதான் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என பல தரப்புகள் கருதுகின்றன.
சிலாங்கூர், கெடா மாநிலங்கள் தளர்வுகளை அனுமதிக்கத் தயக்கம்
நடமாட்டத் தளர்வுகளை கெடா மாநிலம் உடனடியாக அமுல்படுத்தாது என்றும் செவ்வாய்க்கிழமை மாநில நடவடிக்கைக் குழு நடத்தவிருக்கும் சந்திப்புக் கூட்டத்தில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் அறிவித்திருக்கிறார்.
கடந்த புதன்கிழமை வரையில் எந்தவிதப் புதிய கொவிட்-19 பாதிப்புகளும் அற்ற பச்சை நிற மண்டலமாக கெடா அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் தனது மாநிலம் உடனடியாக தளர்வுகளை அனுமதிக்காது என்று கூறியிருக்கிறார்.
எந்தத் தொழில்களை முதலில் அனுமதிப்பது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதற்கேற்ப உள்ளூர் ஊராட்சி மன்றங்களும் தயாராக வேண்டியதிருக்கிறது என்றும் அமிருடின் ஷாரி அறிவித்திருக்கிறார்.
“உதாரணமாக, உணவகங்கள் திறக்கப்பட்டால் அங்கு முறையான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது ஊராட்சி மன்றங்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மற்றொரு உதாரணமாக ஷா ஆலாம் பூங்கா திறக்கப்பட்டால் அங்கு எத்தனை ஆயிரம் பேர்கள் திரளுவார்கள், அங்கு எப்படி நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது என்பது போன்ற அம்சங்களை ஊராட்சி மன்ற அதிகாரிகள் முதலில் நிர்ணயிக்க வேண்டும்” எனவும் அமிருடின் ஷாரி கூறியிருக்கிறார்.
சரவாக் மாநிலமும் உடனடியாக நடமாட்டத் தளர்வுகளை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறது.
ஆக, கட்டுப்பாடுகளின் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டால் மக்கள் வரவேற்பார்கள் என மத்திய அரசாங்கம் நினைத்திருக்க அதற்கு நேர்மாறாக தயக்கங்களும் கண்டனங்களுமே எழுந்திருக்கின்றன.
முன்கூட்டியே மாநிலங்களின் கருத்துகளையும் கேட்காமல், போதிய கால அவகாசம் வழங்காமல், ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவு என்பதாலும் எதிர்ப்புகள் எழுந்தன.
உதாரணமாக, பிரதமர் மொகிதின் யாசின் தளர்வுகளை அறிவித்தது வெள்ளிக்கிழமை, மே 1 ஆம் தேதியாகும். அன்று தொழிலாளர் தின பொதுவிடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளாகும். எனவே, திங்கட்கிழமை முதல் தளர்வுகள் அனுமதி என்றால், அதற்குத் தயாராக அரசு இயந்திரங்களுக்கும் இலாகாக்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படாதது மற்றொரு பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.