கோலாலம்பூர்: கடந்த வாரம் துன் டாக்டர் மகாதீர் முகமட் முகாமில் இருந்து ஏற்பட்ட விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் களையெடுக்கும் பணியில் இறங்கி உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னமும் நம்பிக்கைக் கூட்டணியின் மாநில அரசாங்கமாக இருக்கும் கெடா, அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் வெளியேற்றத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் சரியாக நடந்தால், புதிய மந்திரி பெசாராக பாஸ் கட்சியின் ஜெனெரி சட்டமன்ற உறுப்பினரான முகமட் சனுசி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
கெடா மாநில அரசாங்கத்தில் பாஸ் கட்சியிலிருந்து 15 சட்டமன்ற உறுப்பினர்களும், பெர்சாத்துவிலிருந்து நான்கு பேரும், அம்னோ மற்றும் பிகேஆரைச் சேர்ந்த தலா இரண்டு பேரும் உள்ளனர்.
மொத்தம் 23 சட்டமன்ற உறுப்பினர்களுடன், 36 இருக்கைகள் கொண்ட மாநில சட்டமன்றத்தில் தேசியக் கூட்டணிக்கு 10 பேர் கொண்ட பெரும்பான்மை இருக்கிறது.
முக்ரிஸ் மாநிலத்தின் உயர்மட்ட பதவியில் இருந்து வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.
அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், அவர் 2013 முதல் 2016 வரை வெறும் மூன்று ஆண்டுகள் மந்திரி பெசாராக இருந்தார்.
பாஸ் கட்சிக்கு மாநில மந்திரி பெசார் பதவியை வழங்குவதன் மூலமாக தேசியக் கூட்டணி பலப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது கட்சித் தலைவர் டாக்டர் மகாதீருடன் ஒரு நல்லிணக்கத்திற்காக நம்பிக்கையுடன் இருந்ததுடன், ஒரு நல்லெண்ண சைகையாக கெடாவை முக்ரிஸிடமே ஒப்படைக்க மொகிதின் முடிவு செய்தார்.
ஆயினும், தற்போது, மொகிதினின் பிரதமர் பதவிக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு டாக்டர் மகாதீர் ஒரு பிரேரணையை சமர்ப்பித்த பின்னர் இந்த வார தொடக்கத்தில் எல்லாம் மாறிவிட்டது.
இது யுத்த பிரகடனமாக மாறியதை அடுத்து, முகிரீஸுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க மொகிதினுக்கு ஒரு காரணம் அமைந்துவிட்டது.