கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவரின் மகன் ரிசா அசிஸ் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்ந்து பல்வேறு தரப்புகளாலும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் ரிசா அசிசின் விடுவிப்புக்கு ஒப்புதல் வழங்கியிருந்தார் என நேற்று செய்திகள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ட இந்த உடன்பாட்டின் காரணமாக ரிசா அசிசிடமிருந்து 107.3 மில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 467 மில்லியன்) அரசாங்கத்துக்குக் கிடைக்கும் எனக் கூறியது.
அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் ரிசா அசிஸ் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான உடன்பாட்டுக்கு டோமி தோமஸ் ஒப்புதல் அளித்தார் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
“நான் ஒப்புதல் தரவில்லை” மறுத்த டோமி தோமஸ்
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் வெளியிட்ட அறிக்கையில், ரிசா அசிஸ் விடுவிப்புக்கு தான் ஒப்புதல் வழங்கவில்லை என அதிரடியாக மறுத்தார்.
“நான் இரண்டரை மாதங்களுக்கு முன்னரே பதவி விலகிவிட்டேன். அதுவரையில் ரிசா அசிசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்க எந்த உடன்பாடும் காணப்படவில்லை. எனவே நான் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கை பொய்யானது. இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்” என டோமி தோமஸ் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
“டோமி தோமஸ் ஒப்புக் கொண்ட உடன்பாடுதான் என என்னிடம் கூறப்பட்டது” – நடப்பு சட்டத் துறைத் தலைவர்
இதற்கிடையில் இதன் தொடர்பில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடப்பு சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண்.
“ரிசா அசிஸ், ஊழல் தடுப்பு ஆணையம், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு இடையில் காணப்பட்ட உடன்பாட்டின்படி ரிசாவின் விடுவிப்புக்கு டோமி தோமஸ் ஒப்புக் கொண்டார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது” என அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.
இதன் காரணமாகத்தான் தானும் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட ஒப்புதல் வழங்கியதாகவும் இட்ருஸ் ஹாருண் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ரிசா வழங்குவதற்கு ஒப்புக் கொண்ட தொகை, மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்ட சொத்துகளின் விவரங்களை தனது நீண்ட அறிக்கையில் இட்ருஸ் ஹாருண் பட்டியலிட்டிருக்கிறார்.