Home நாடு டோமி தோமஸ் – அவரின் நூல் பதிப்பாளர் மீதும் நஜிப் வழக்கு

டோமி தோமஸ் – அவரின் நூல் பதிப்பாளர் மீதும் நஜிப் வழக்கு

466
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தன்மீது தவறான நோக்கத்தோடும், தீய உள்நோக்கத்தோடுத் குற்றவியல் வழக்குகளைத் தொடுத்தார் என முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டோமி தோமஸ் மீது ஏற்கனவே வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறார் நஜிப் துன் ரசாக்.

இப்போது இன்னொரு புதிய வழக்கை அவர் டோமி தோமசுக்கு எதிராகத் தொடுத்திருக்கிறார்.

டோமி தோமஸ் தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் எழுதிய ஆங்கில நூல் “My Story: Justice in the Wilderness” என்பதாகும். அந்த நூலில் தான் சட்டத்துறைத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் எதிர்நோக்கிய பிரச்சனைகள் குறித்து டோமி தோமஸ் விவரித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அந்த நூலில் தன்னைப்பற்றிய அவதூறான கருத்துகளை டோமி தோமஸ் எழுதியிருப்பதாக, அவர் மீது வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறார் நஜிப். மேலும் அந்த நூலைப் பதிப்பித்த ஜிபி கெராக்புடாயா எண்டர்பிரைஸ் சென்டிரியான் பெர்ஹாட்  (GB Gerakbudaya Enterprise Sdn Bhd) நிறுவனத்தையும் பிரதிவாதிகளில் ஒருவராக நஜிப் இணைத்திருக்கிறார்.

மங்கோலியப் பெண்மணி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் தன்னைத் தொடர்பு படுத்தி அவதூறானத் தகவல்களைத் தந்திருக்கிறார் என்ற அடிப்படையில் நஜிப் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வழக்கு நேற்று புதன்கிழமை (அக்டோபர் 27) ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் நஜிப்பின் வழக்கறிஞரான ஷாபி அண்ட் கோ வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.

தன்மீது அவதூறான கருத்துகளை எழுதியதற்காக 10 மில்லியன் இழப்பீட்டுத் தொகையையும் தனது வழக்கு மனுவில் நஜிப் கோரியுள்ளார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal