Home நாடு டோமி தோமஸ், அரசாங்கம் மீது நஜிப் புதிய போராட்டம் – “தீய நோக்கத்துடன் என்மீது வழக்கு”

டோமி தோமஸ், அரசாங்கம் மீது நஜிப் புதிய போராட்டம் – “தீய நோக்கத்துடன் என்மீது வழக்கு”

626
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தன்மீது பல முனைகளிலும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அவை பல்வேறு கட்டங்களில் இருந்து வரும் நிலையில், அவற்றுக்குப் பதிலடியாக முன்னாள் சட்டத் துறைத்தலைவர் டோமி தோமஸ் மீதும், அரசாங்கத்தின் மீதும் தனது நீதிமன்ற எதிர் போராட்டத்தைத் தொடக்கியுள்ளார் நஜிப் துன் ரசாக்.

முன்னாள் சட்டத் துறை தலைவர் டோமி தோமஸ் மீதும் அரசாங்கத்தின் மீதும், தன் மீது தவறான குற்றவியல் (கிரிமினல்) வழக்குகளைத் தொடுத்தனர் என்னும் அடிப்படையில் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார் நஜிப்.

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் பதிவான இந்த வழக்கில் டோமி தோமசையும், அரசாங்கத்தையும் பிரதிவாதிகளாக நஜிப் பெயர் குறிப்பிட்டிருக்கிறார். எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நஜிப்பின் இந்தப் புதிய வழக்கு மீதான விசாரணை தொடங்குகிறது என ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

தன்மீது தவறான குற்றவியல் வழக்கைத் தொடர்ந்ததன் மூலம் டோமி தோமஸ் தனது அரசாங்கப் பதவியில் இருந்து கொண்டு முறையற்ற முறையில் நடந்து கொண்டார், தீய உள்நோக்கத்துடன் அந்த வழக்குகளைத் தொடர்ந்தார், கவனக் குறைவாக நடந்து கொண்டார் என்பது போன்ற காரணங்களை நஜிப் தன் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

டோமி தோமசின் நடவடிக்கைகளுக்கு அவரை நியமித்த அமைப்பு என்ற முறையில் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நஜிப் தனது வழக்கு மனுவில் தெரிவித்துள்ளார்.

1 எம்டிபி வழக்கு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகார விதிமீறல் வழக்கு உள்ளிட்ட தன்மீதான நான்கு வழக்குகளை டோமி தோமசின் தவறான செய்கைக்கான உதாரண வழக்குகளாக நஜிப் சுட்டிக்காட்டியுள்ளார்.

2018-இல் துன் மகாதீர் பிரதமரானதைத் தொடர்ந்து மேற்கண்ட 4 வழக்குகளில் தொடர்புடை 35 குற்றச்சாட்டுகள் தன்மீது சுமத்தப்பட்டிருப்பதாக நஜிப் மேலும் தனது வழக்கு மனுவில் தெரிவித்தார்.