வாஷிங்டன் – கோடிக்கணக்கில் வருமானம் பெறுபவர்கள் வணிகர்கள் மட்டுமல்ல! சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டாளர்களும்தான்!
போர்ப்ஸ் வணிக ஊடகத்தின் மதிப்பீட்டின்படி 2020-ஆம் ஆண்டில் மிக அதிகமான வருமானத்தை ஈட்டிய விளையாட்டாளராக டென்னிஸ் விளையாட்டின் முன்னணி நட்சத்திரம் ரோஜர் பெடரர் (படம்) திகழ்கிறார்.
வரிக்கு முந்திய வருமானமாக 106.3 மில்லியன் அமெரிக்க டாலரை ரோஜர் பெடரர் ஈட்டியிருக்கிறார்.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் போர்ப்ஸ் பட்டியலின்படி ரோஜர் இந்தப் பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.
அவரது வருமானத்தில் 6.3 மில்லியன் டாலர் மட்டுமே விளையாட்டுப் போட்டிகளில் வென்றதன் மூலம் அவர் பெற்றதாகும்.
100 மில்லியன் டாலர்களை அவர் விளம்பரங்களின் மூலமாகவும், நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதன் மூலமும் ஈட்டினார்.
இதே பட்டியலில் 2013-இல் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டாளர்களின் பட்டியலில் போர்ச்சுகல் நாட்டின் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்-இடது) இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
105 மில்லியன் டாலர் வருமானத்தை ரொனால்டோ ஈட்டினார்.
104 மில்லியன் டாலரைச் சம்பாதித்த அர்ஜெண்டினாவின் காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி (படம் – வலது) பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
வழக்கமாக காற்பந்து நட்சத்திரங்களே வருமானத்தை அதிகம் ஈட்டும் விளையாட்டாளர்களாகத் திகழ்கின்றனர். இந்த முறை அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, பட்டியலில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டுகின்றனர். விளம்பரங்களின் மூலமும் நிறைய சம்பாதிக்கின்றனர்.
ஆனால் அவர்களின் வருமானம் இந்திய ரூபாயில் கணக்கிடப்படுவதால் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் வருமானத்தின் மதிப்பு பெருமளவில் குறைந்து விடுகிறது.
இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலமில்லை, நிறைய வருமானத்தை ஈட்டித் தருவதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே!