சிங்கப்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் கூடுதலாக 247 கொவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டினர் தங்கியிருகும் தங்குமிடங்களில் வசிக்கின்றனர்.
சமீபத்திய தொற்று எண்ணிக்கையுடன், இப்போது 41,216 சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சமூகத்தில் ஐந்து தொற்றுநோய்கள் மட்டுமே இருப்பதாக சுகாதார அமைச்சகம் ஓர் அறிக்கையில் கூறியது.
நேற்று பிற்பகுதியில் வெளியிடப்பட்ட முழு தரவுகளில், சிங்கப்பூரர்களிடையே ஏற்பட்ட தொற்று 1,801-ஆகவும், 581 இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களும், 38,587 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட தொற்றுகள் எனவும் குறிப்பிட்டிருந்தது.
நேற்று நண்பகல் வரை, மொத்த நோயாளிகளில் 31,163 அல்லது சுமார் 76 விழுக்காடு பேர் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மருத்துவமனையில் 269 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இன்னும் சிகிச்சைப்பெற்று வருவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.