Home One Line P1 பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு

பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு

561
0
SHARE
Ad
படம்: முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ்

ஜோர்ஜ் டவுன்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​கைது செய்யப்பட்ட முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் எம்ஏசிசிக்கு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.

“எம்ஏசிசி ஏழு நாட்கள் தடுப்புக் காவலுக்கு விண்ணப்பித்தது, ஆனால், முறையீட்டுக்குப் பின்னர், நீதிபதி நான்கு நாட்கள் அனுமதி வழங்கினார்.

#TamilSchoolmychoice

“சமீபத்தில் புகார் அறிக்கையைத் தொடர்ந்து எம்ஏசிசியின் விசாரணையை எளிதாக்குவதற்காக இந்த கைது செய்யப்பட்டது. மேலதிக விவரங்களைவெளியிட எனக்கு அனுமதி இல்லை.” என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள எம்ஏசிசியின் பினாங்கு தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராயத் தொடங்கியது.

இது தொடர்பாக மேலும் பல மாநில அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த வழக்கில் எங்களுக்கு புதிய தடயங்கள் இருப்பதால், நாங்கள் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குகிறோம்.

“விசாரணையாளர்கள் இப்போது வழக்கை இறுதி செய்வதில் உள்ளனர்.” என்று அது தெரிவித்துள்ளது.

“ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட மாநில அரசாங்க சாட்சிகளையும் நாங்கள் அழைப்போம்.” என்று எம்ஏசிசி தெரிவித்தது.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த தமது விசாரணையை எம்ஏசிசி ஒருபோதும் நிறுத்தவில்லை என்று எம்ஏசிசி குறிப்பிட்டுள்ளது.

2018- இல் பிபிசி தலைவராக வருவதற்கு முன்பு, 52 வயதான செவ், உற்பத்தி, தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு உதவியாளராக இருந்தார்.

இதற்கிடையில், மூன்று எம்ஏசிசி குழுக்கள் கடந்த சில நாட்களில் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக பல நிறுவனங்களில் சோதனைகளை நடத்தியது.

இந்த நடவடிக்கையில் காவல் துறை மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் சம்பந்தப்பட்டிருந்தது.

விசாரணைகளை நடத்துவதற்காக மூன்று துறையினரும் கடந்த இரண்டு வாரங்களாக பினாங்கில் இருந்ததாக நம்பப்படுகிறது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோலாலம்பூரில், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை எம்ஏசிசி விசாரித்தது.

மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.

மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.

கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரைத் தடுத்து வைத்தது.

அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த கட்டுமானத் திட்டம் மலேசியா-சீனா கூட்டு முயற்சியாகும். இது பினாங்கின் கர்னி டிரைவை மலேசிய நிலப்பகுதியில் உள்ள பாகான் ஆஜாம் பகுதியை இணைக்கும் 7.2 கி.மீ கடலடி சுரங்கப்பாதையை கட்டும் திட்டமாகும்.