Home One Line P1 வாரிசானில் இணையும் முன்மொழிவை மகாதீர் முகாம் வரவேற்கிறது!

வாரிசானில் இணையும் முன்மொழிவை மகாதீர் முகாம் வரவேற்கிறது!

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரை கட்சியில் சேர அனுமதிக்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பைத் திருத்த வாரிசான் தயாராக உள்ளது.

இந்த முன்மொழிவை டாக்டர் மகாதீர் முகமட் முகாம் வரவேற்றுள்ளது.

இருப்பினும், இதுவரை தனது குழு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மார்சுகி யஹ்யா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மகாதீர் உட்பட நான்கு பேரின் வழக்கை இரத்து செய்ய கோரிய பிரதமர் மொகிதின் யாசினின் விண்ணப்பம் தொடர்பாக, எவ்வாறான முடிவை அளிக்கிறது என்பதை அறிந்த பின்னரே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று மார்சுகி கூறினார்.

விண்ணப்பம் குறித்த முடிவு ஆகஸ்ட் 7- ஆம் தேதி அறியப்படும்.

“வாரிசான் முன்வைத்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் வாரிசானில் சேர விரும்புகிறோமா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

“இருப்பினும், ஆகஸ்ட் 7- க்குப் பிறகு, நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால், எங்களுக்கு ஒரு புதிய தளம் இருக்க வாய்ப்புள்ளது. இது பெரும்பாலும் ஒரு புதிய கட்சி அல்லது நாங்கள் வாரிசானுடன் கலந்துரையாடுவோம்.

“இருப்பினும், இந்த சுயேச்சைக் கூட்டணியில் துன் மகாதீருடன் கூட்டணியின் ஒரு பகுதியாக வாரிசான் உள்ளது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மகாதீர் கட்சியில் சேர ஆர்வமாக இருந்தால், தங்கள் கட்சியின் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வாரிசான் தயாராக இருப்பதாகக் கூறியது. வாரிசான் நிரந்தரத் தலைவர் லீவ் வு கியோங் நேற்று ஞாயிற்றுக்கிழமை இதனைத் தெரிவித்திருந்தார்.

தற்போது வாரிசான் கட்சியின் உறுப்பியம் சபா மாநிலத்தை அல்லாதவர்களுக்கு திறக்கப்படாததால், இதில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தேவைப்பட்டால் அரசியலமைப்பில் உள்ள விதிகளை மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

மேலும், கருத்து தெரிவித்த மார்சுகி, தனது குழுவின் அனைத்து நடவடிக்கைகளும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.