சியோல்: வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எல்லையில் அவசரகால மற்றும் ஊரடங்கை அறிவித்தார்.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் தென் கொரியாவிலிருந்து சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்தன.
இது வட கொரிய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட முதல் சம்பவமாகும்.
“கொவிட்-19 நச்சுயிர் நாட்டிற்குள் நுழைந்து விட்டது” என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குச் சென்ற ஒருவர், மீண்டும் திரும்பிய போது கொவிட் -19 அறிகுறிகளுடன் இருந்ததாக அச்செய்தி நிறுவனம் கூறியது.
சம்பந்தப்பட்ட நபர் பரிசோதிக்கப்பட்டாரா என்று கேசிஎன்ஏ தெரிவிக்கவில்லை, ஆனால் “அந்த நபர் சுவாசம் மற்றும் இரத்தப் பரிசோதனைகளில் இந்த முடிவு பெறப்பட்டது” என்று அது கூறியது.
அந்த நபரை தனிமைப்படுத்தவும், அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற தகவலைத் திரட்டவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.