ஜோர்ஜ் டவுன்: பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் தனது பதவியைப் பயன்படுத்தி 3.3 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
இன்று காலை பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டின் படி, சாருல் அகமட் முகமட் சுல்கிப்லிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு திட்டத்தை செயல்படுத்த நியமிக்க உதவுவதற்காக லிம் அவ்வாறு செய்தார் என்று குறிப்பிடப்பட்டது.
ஜனவரி 2011 முதல் ஆகஸ்ட் 2017 வரை பினாங்கு முதல்வர் அலுவலகத்தில் இந்த குற்றத்தை லிம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது பட்டர்வொர்த்தை பினாங்கு தீவுடன் இணைக்கும் பிரதான பாதையையும். கடலடி சுரங்கப்பாதையும் இணைக்கும் திட்டமாகும்.
அவர் எம்ஏசிசி சட்டம் 2009- இன் பிரிவு 23 (1)- இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 24 (1)- இன் படி தண்டிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், லிம் 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் இலஞ்சத்தின் அளவு அல்லது மதிப்பை விட ஐந்து மடங்குக்குக் குறையாமல் அபராதம் விதிக்கலாம்.
காலை 8.55 மணியளவில் லிம் தனது மனைவி பெத்தி சியூ மற்றும் அவரது தாயாருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர்களை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
லிம் வழக்கறிஞர்களாக கோபிந்த் சிங், ராம்கர்பால் சிங், ஆர்.எஸ்.என் ராயர் மற்றும் வி. விமல் அரசன் ஆகியோர் செயல்படுகிறார்கள். அகமட் அக்ரம் கரிப், முகமட் முக்சானி பாரிஸ் முகமட் மொக்தார் மற்றும் பிரான்சின் செரில் ராஜேந்திரம் ஆகியோர் துணை அரசு வழக்கறிஞர்களாக செயல்படுகிறார்கள்.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் லிம் மீது 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் இலஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டது.