மும்பை – கடந்த ஜூன் 14-ஆம் தேதியன்று தில் தற்கொலை செய்துகொண்ட இந்திப்பட உலகின் இளம் கதாநாயக நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடர்பான விசாரணைகள் இனி சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறையினால் விசாரிக்கப்பட இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 19) உத்தரவிட்டது.
34 வயதே நிரம்பிய சுஷாந்த் சிங் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும், ஆரூடங்களும் எழுந்தன.
அவரது முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி குறித்தும் அவருக்கும் சுஷாந்த் சிங்குக்கும் இடையிலான காதல், பணப் பரிமாற்றங்கள் ஆகியவை காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இனி சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான அனைத்து விசாரணைகளும், முதற்கட்ட புகார்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மும்பை காவல் துறையின் இனி சிபிஐ அதிகாரிகளின் விசாரணைகளில் உதவி புரிய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
சுஷாந்த் சிங் தற்கொலையில் சந்தேகங்கள்
பல இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமான அவர் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படமாக வெளிவந்த எம்எஸ் தோனி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த் சிங் .
தோனியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அந்தப் படத்தில் தோனியாகவே மிகச் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுதலையும் அவர் பெற்றிருந்தார்.
அந்தப் படம் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூன் 14-ஆம் அன்று சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது ஊடகங்களின் கழுகுப் பார்வை பதிந்தது.
அவரைப் பற்றி பல்வேறு ஐயப்பாடுகளும் அவரது வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள் குறித்தும் ஊடகங்கள் விலாவாரியாக எழுதத் தொடங்கின.
சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிஐ தலையிட்டு நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
அதைத் தொடர்ந்தே உச்ச நீதிமன்றம் இன்று சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணை சிபிஐ நேரடியாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது.