கோலாலம்பூர்: இன்று மதியம் 12 மணிவரை, கொவிட்19 தொற்றுக் காரணமாக பதிவான சம்பவங்கள் 100 எண்ணிக்கையை எட்டியது. இதன் மூலமாக, நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த கொவிட்19 தொற்று எண்ணிக்கை 9,559-ஆக உயர்ந்தது.
நேற்று, திடீரென 62 சம்பவங்கள் பதிவானதை அடுத்து, மலேசியர்களிடத்தில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய இந்த கூடுதல் எண்ணிக்கை மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று 12 பேர் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,136-ஆக அதிகரித்துள்ளது.
7 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 4 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத மிகப் பெரிய தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய, தொற்று சம்பவங்களில் 85 சம்பவங்கள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 15 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
அவர்களில் 2 பேர் மலேசியர்கள். 13 பேர் வெளிநாட்டினர்.
உள்நாட்டில் பதிவான 85 சம்பவங்களில், 55 பேர் மலேசியர்கள். கெடாவில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சபாவில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பெர்லிசில் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். மேலும், 30 பேர் சபாவில் தொற்றுக் கண்ட வெளிநாட்டினர்.