ஷா ஆலாம்: முன்னாள் தேசிய காற்பந்து வீரர் காலிட் ஜாம்லுஸுக்கு சொந்தமான தங்க காலணிகளை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாங்க ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விலையில், அது வாங்கப்படுகிறது.
சிலாங்கூர் அரண்மனையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் இது குறித்த தனிப்பட்ட விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
2002-இல் காலிட் வென்ற தங்க காலணியை, இஸ்தானா ஆலாம் ஷா முற்றத்தில் அமைந்துள்ள சிலாங்கூர் காற்பந்து அருங்காட்சியகத்தில் வைக்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.
2005- 2006 பருவத்தில் பிரீமியர் லீக்கில் சிலாங்கூர் அணியை காலிட் பிரதிநிதித்தார்.
முன்னாள் பேராக் வீரரான காலிட், 17 கோல்களை அடித்த பின்னர் தங்கக் காலணி விருதை வென்றார்.
முன்னதாக, முன்னாள் தேசிய காற்பந்து வீரரான அவர் தமது முகநூல் பக்கம் மூலம் நேரடி ஏலம் மூலம் 10,500 ரிங்கிட் விலையை அறிவித்தார்.
மூன்று ஆண்டுகளாக வேலையில்லாமலும், மலேசிய காவல் துறை அணியின் உதவி பயிற்சியாளராக ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததாலும் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.