
தோக்கியோ: ஜப்பானின் ஆளும் கட்சி திங்களன்று தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிடே சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது. சின்சோ அபேவுக்கு பதிலாக நாட்டின் அடுத்த பிரதமராக அவரை நியமிப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற பிரதிநிதிகளிடமிருந்து மொத்தம் 534 வாக்குகளில் 377 வாக்குகளைப் பெற்ற சுகா, இரண்டு போட்டியாளர்களுக்கு எதிராக எளிதாக வென்றார்.
சுகா முறையாக தமது போட்டியை அறிவிப்பதற்கு முன்பே, 71 வயதான அவருக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே முக்கிய தரப்புகளின் ஆதரவு இருந்தது. அவரது நியமனம் வாயிலாக உறுதியளிக்கும் நிலைத்தன்மை, அபேயின் கொள்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.
ஆகஸ்ட் பிற்பகுதியில் தனது ஆட்சியில் மேலும் ஒரு வருடம் மீதமுள்ள நிலையில், அபே இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் நீண்ட காலமாக போராடி வந்த குடல் நோய்க் காரணத்தினால், அவரால் தொடர்ந்து பிரதமர் பதவியில் நிலைக்க இயலாது என்று அவர் கூறினார்.
சுகா அவருக்குப் பின் வெற்றி பெற்றால், பெரிய கொள்கை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் அபேவின் முக்கிய கொள்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதே தனது பணி என்று சுகா கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்து பிரதமராக பதவி ஏற்க உள்ளவர் சிக்கலான சவால்களை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்19 தொற்றுநோய்க்கு முன்னர் நாடு ஏற்கனவே பொருளாதார ரீதியில் மந்தநிலையில் இருந்து வருகிறது. மேலும், அபேவால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் பல தற்போது ஆபத்தில் உள்ளன.