Home One Line P1 ‘நானே இன்னும் பிரதமர்’ -மொகிதின் யாசின்

‘நானே இன்னும் பிரதமர்’ -மொகிதின் யாசின்

497
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: நேற்றைய அன்வார் இப்ராகிமின் பெரும்பான்மை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவே, சபா புறப்பட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்குக் கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் இன்னும் உங்கள் பிரதமரா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்,” என்று அவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசினார்.

“ஏனென்றால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர், அவரது பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை. அவரிடம் பெரும்பான்மை இருப்பதாகவும், எனக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் கூறினார். எனவே அவர் பிரதமராக இருக்க உரிமை இருப்பதாக அவர் கருதுகிறார்.

#TamilSchoolmychoice

“ஆனால், நான் இன்னும் உங்கள் பிரதமர் என்று உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார். அவரின் அந்த கூற்றுக்கு அங்கு கூடியிருந்த மக்களிடமிருந்து உரத்த கரவோசை எழும்பியது.

நேற்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தமக்கு ஆதரவு வலுவாக, வலிமையாக, உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

அன்வாரின் கருத்துக்களை மதிப்பதால் அவரின் கூற்றை தாம் கேள்வி கேட்கவில்லை என்று மொகிதின் கூறினார்.

“ஆனால், நம் நாடு நாடாளுமன்ற ஜனநாயக முறையை கடைப்பிடிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“எனவே, நாம் எதைச் செயல்படுத்த விரும்புகிறோமோ அதற்கான அடிப்படையாக கூட்டரசு அரசியலமைப்பை நாம் ஆதரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தனக்கு மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்க ஆதரவு இருப்பதாக அன்வார்  கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்ததாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.

மிகக் குறுகியப் பெரும்பான்மையைத் தான் கொண்டிருக்கவில்லை என உறுதிபடத் தெரிவித்தார் அன்வார். எனினும், மாமன்னர் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாக முதலில் அவரிடம் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்டியலைச் சமர்ப்பித்த பின்னரே நான் பகிரங்கமாகத் தெரிவிப்பேன் என்றும் அன்வார் கூறினார்.

“நான் ஐந்து அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. மிக வலுவான, மிக அதிகமானப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன்” என்றும் அன்வார் தன்னம்பிகையுடன் கூறினார்.

அன்வாரின் இந்த அறிவிப்பு சபா மாநிலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்துகளும் நிலவி வரும் நிலையில் பிரதமர் நேற்றிரவே அங்கு வருகை தந்து நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.