Home கலை உலகம் மறைந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி- இன்று மாலை உடல் தகனம்

மறைந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி- இன்று மாலை உடல் தகனம்

1113
0
SHARE
Ad

srinivasசென்னை, ஏப்ரல் 15- பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 83.

பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

தமிழில் ‘பாசமலர்’ படத்தில் பாடிய “யார் யார் யார் அவள் யாரோ”, ‘பாவ மன்னிப்பு’ படத்தில் பாடிய “காலங்களில் அவள் வசந்தம்”, ‘வீரதிருமகன்’ படத்தில் பாடிய “ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா மற்றும் “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்” பாடல்கள் காலத்தால் அழியாதவை.

#TamilSchoolmychoice

‘பார் மகளே பார்’ படத்தில் பாடிய “அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே’ மற்றும் “மதுரை நகரில் தமிழ் சங்கம்” பாடல்களும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் பாடிய போகபோக தெரியும் பாடலும், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாடிய “அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்”, “விஸ்வநாதன் வேலை வேண்டும்” மற்றும் உங்கள் “பொன்னான கைகள் புண்ணாகலாமா” பாடல்களும் நெஞ்சை விட்டு என்றும் நீங்காதவை.

“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்”, “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்”, “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன”, “மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா” என எண்ணற்ற இனிய பாடல்களை பாடி உள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் நிறைய பாடல்களை பாடி உள்ளார்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளனர்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.