Home கலை உலகம் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

720
0
SHARE
Ad

jeya

சென்னை, ஏப் 15-  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

#TamilSchoolmychoice

பி.பி.எஸ். என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸ் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உட்பட 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை.

‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.  மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திறம்பட பணியாற்றியவர்.  தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். PBS என்ற இவரின் பெயரிலேயே Playback Singer, அதாவது பின்னணிப் பாடகர் என்ற வார்த்தைகள் அடங்கியிருப்பது இறைவன் கொடுத்த வரம். இசையோடு இவர் இரண்டறக் கலந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு திரைப்படத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் தனிப்பட்ட முறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.