பீஜிங், ஏப். 15- சீனாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
தமிழ் புத்தாண்டை நினைவு கூரும் விதமாக சீனாவில் பணியாற்றும் 70க்கும் மேற்பட்ட தமிழர்கள், பீஜிங் தமிழ் சங்கமம் என்ற அமைப்பை நேற்று துவக்கியுள்ளனர்.
இந்த துவக்க விழாவில் பீஜிங்கில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை மற்றும் மலேசியாவை சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பெருமளவில் பங்கேற்றனர். சீன வானொலியின் தமிழ்ச் சேவை பிரிவில் பணியாற்றும் மரியா மைக்கேல் இந்த தகவலை தெரிவித்தார்.
தமிழர்களின் திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுவதும் தமிழர்கள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடல்களில் பங்கேற்க வைப்பதும் தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பீஜிங் தமிழ் சங்கமத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என அவர் கூறினார்.