Home One Line P1 அடுத்த ஆண்டு தைப்பூசம் கேள்விக்குறியா?

அடுத்த ஆண்டு தைப்பூசம் கேள்விக்குறியா?

607
0
SHARE
Ad

கோலாலம்பூர் (பெர்னாமா செய்தி): மலேசியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சமய விழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும்.

இக்கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியிருக்கும் வேளையில், பெரும் மருட்டலையும் பீதியையும் ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பாதிப்பால், 2021-ஆம் ஆண்டில் தைப்பூச விழா நடைபெறுமா அல்லது தவிர்க்கப்பட வேண்டுமா என்ற அச்சமும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.

தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

#TamilSchoolmychoice

மக்கள் கடல் அலையென கூடும் இவ்விழாவில், தொடுகை இடைவெளியைப் பின்பற்றுவது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

மேலும், வருகையைப் பதிவு செய்வது, உடல் உஷ்ணத்தைப் பரிசோதிப்பது போன்றவற்றை மேற்கொள்வதும் ஏற்புடையதல்ல.

எனவே, அடுத்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை தற்காலிகமாக தவிர்ப்பதன் வழியாக, நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்று என்று மலேசிய மருத்துவ சங்கமான எம்.எம்.ஏ பரிந்துரை செய்திருந்தது. இது ஏற்புடையதும் கூட.

இது குறித்த முன்னறிவிப்பு செய்வது அவசியம், குறிப்பாக, காவடிகள் தயாரிப்பது, மேள வாத்தியங்கள் ஒப்பந்தங்கள் செய்வது, சந்தை ஏற்பாடுகள் என பல தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்  அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் பெர்னாமாவிடம் தெரிவித்திருந்தார்.

இப்பரிந்துரை குறித்து, நாட்டிலுள்ள முதன்மை ஆலய நிர்வாகங்களைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.

”தற்போதுள்ள சூழலை வைத்து எதையும் கணிக்க முடியாது. அதுமட்டுமின்றி தைப்பூசத்திற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே, அப்போதுள்ள நிலைப்பாட்டை முன்னிட்டு முடிவுகள் எடுப்பது சிறந்தது,” என்று கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கெளரவச் செயலாளர் சேதுபதி குமாரசாமி தெரிவித்தார்.

”இதர மாநிலங்களைக் காட்டிலும் கெடா மாநிலத்தில் பாதிப்பு மிகவும் கூடுதலாக இருப்பதால், அரசாங்கத்தின் உத்தரவுக்கு தாங்கள் காத்திருப்பதாகவும் அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு நிச்சயம் கட்டுப்படுவோம்,” என்று சுங்கை பட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய தேவஸ்தானத்தின் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி கூறினார்.

”இது குறித்து தற்போது எவ்வித கருத்துகளையும் வெளியிட முடியாது. வரும் வியாழக்கிழமை நடைபெறும் செயலவைக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னரே உரிய முடிவு எடுக்கப்படும்,” என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம். விவேகானந்தா தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை தேவஸ்தானம், இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருவதால், சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றியே இந்து அறப்பணி வாரியம் முடிவு எடுக்கும் என்று பினாங்கு ஶ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் தலைவர் டத்தோ சுப்ரமணியம் இராமலிங்கம் தெரிவித்தார்.

தற்போது பதிவாகியுள்ள கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் அடுத்த மாதமோ அல்லது அதற்கு அடுத்த மாதமோ இந்த எண்ணிக்கை குறையலாம்.

எனவே, அதற்கு முன்னதாக எவ்வித அறிவிப்பையும் வெளியிட்டு பக்தர்களை மட்டுமின்றி காவடி தயாரிப்பவர்கள், சிறு வணிகர்கள் என்று எந்தத் தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்த தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.