பாரிஸ் : (மலேசிய நேரம் மாலை 7.00 மணி நிலவரம்) பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒரு பெண்மணியின் கழுத்து அறுக்கப்பட்டதாக காவல் துறையினரின் தெரிவித்தனர்.
ஒரு தேவாலயத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கழுத்தறுக்கப்பட்ட பெண்மணியும் அதே பாணியில் தாக்குதல் நடத்தப்பட்ட மற்றொரு ஆணும் சம்பவம் நடந்த இடத்திலேயே மாண்டனர். மற்றொரு பெண்மணி அங்கிருந்து தப்பித்து ஓட முற்பட்டார்.
எனினும் தாக்குதல்காரன் தொடர்ந்து அந்தப் பெண்ணையும் விரட்டி கத்தியால் குத்தியதில் அந்தப் பெண்மணியும் மாண்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அடுத்த சில மணி நேரங்களில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோன் நீஸ் நகரை வந்தடையவிருக்கும் நேரத்தில் இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இதைத் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.