சியோல்: தென் கொரியாவின் வேளாண் அமைச்சகம் செவ்வாயன்று நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காட்டு பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சலின் நோய்க்கிருமியான எச்5என்8 விகாரத்தை உறுதிசெய்து, பறவைக் காய்ச்சல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தலைநகர் சியோலுக்கு 84 கிலோமீட்டர் மத்திய மேற்கில் உள்ள சியோனான்-சி, சுங்சியோங்னம்-டோவில் கடந்த வாரம் காட்டு பறவைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த நச்சுயிரி கண்டுபிடிக்கப்பட்டதாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பரவலாக பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், நச்சுயிரி பரவும் அபாயங்கள் இருப்பதால் பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்ப்ளூயன்ஸா) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இது ஒரு மோசமான சூழ்நிலை. புலம்பெயர்ந்த பறவைகள் நிலத்திலிருந்து பண்ணைக்கு பல்வேறு வழிகளில் பறந்து செல்லலாம், ” என்று வேளாண் அமைச்சர் கிம் ஹியோன்-சூ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஹாலந்தில் செவ்வாய்க்கிழமை பறவை காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டச்சு சுகாதார அதிகாரிகள் கோழிகளைக் கொல்ல உத்தரவிட்டனர்.