நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) மனிதவள மேம்பாட்டு நிதிக் கழக அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது சரவணன் இந்த விவரங்களை வெளியிட்டார்.
“முதலில் சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்த கொவிட்-19 பாதிப்புகள் பின்னர் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி பலர் வேலைகளை இழக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அரசாங்கம் பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது. வேலை இழந்தவர்களுக்கு மறு வேலை வாய்ப்புகள் வேலை இழந்தவர்களுக்கு உதவித்தொகை, நிறுவனங்களுக்கு உதவித்தொகை குடும்பங்களுக்கான உதவித்தொகை என பல வகைகளிலும் அரசாங்கம் நிலைமையைச் சீர்படுத்த முயற்சிகள் எடுத்து வந்தது. அந்த வரிசையில் அரசின் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் தோள் கொடுத்து உதவும் வகையில் மனிதவள மேம்பாட்டு நிதிக் கழகம் வேலை பயிற்சி வேலைத் திறன் பயிற்சிகளை உருவாக்கி இதுவரையில் சுமார் 48 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தை நாட்டில் குறைப்பதில் மனிதவள மேம்பாட்டு நிதி கழகம் ஒரு முக்கிய பணியை ஆற்றி உள்ளது” என்று சரவணன் மேலும் கூறினார்.


இந்த ஆண்டு கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் குறித்தும் கருத்துரைத்த சரவணன் “புதிய சூழலில் புதிய மாற்றங்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டிய சூழ்நிலைக்கு நமது மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். புதிய கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு விதிக்கப்பட்டிருக்கின்றன.
குடும்பத்தினரை சந்திக்க பக்கத்து மாநிலங்களுக்கு பயணம் செல்ல முடியாது. நாம் வழக்கமாக கொண்டாடுவது போல ஏராளமானோரை கொண்டு திறந்த இல்ல உபசரிப்பு நடத்த முடியாது. இந்த புதிய சூழலுக்கேற்ப நமது இந்து பெருமக்கள் அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுடன், நிபந்தனைகளுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றும் சரவணன் கூறினார்.