Home One Line P2 ஆசியான் ஒருங்கிணைப்பு பொருளாதார உடன்பாடு – பங்குச் சந்தையும் ரிங்கிட் மதிப்பும் உயர்வு

ஆசியான் ஒருங்கிணைப்பு பொருளாதார உடன்பாடு – பங்குச் சந்தையும் ரிங்கிட் மதிப்பும் உயர்வு

623
0
SHARE
Ad
கடந்தாண்டு நடைபெற்ற ஆசியான் ஆர்செப் மாநாட்டில் தலைவர்கள்…

கோலாலம்பூர் : கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 31 சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆர்செப் (Regional Comprehensive Economic Partnership – RCEP) எனப்படும் ஆசியான் வட்டார பொருளாதார உடன்பாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கையெழுத்தானது.

ஆசியானைச் சேர்ந்த 10 நாடுகளோடு, சீனா, ஜப்பான் தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளும் இந்த உடன்பாட்டில் இயங்கலை (Virtual) வழியாகக் கையெழுத்திட்டன.வியட்னாம் இந்த உடன்பாட்டுக்கான இயங்கலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த 15 நாடுகளுக்கிடையிலான இந்த சுதந்திர வாணிப உடன்பாடு உலகம் முழுவதிலுமான 30 விழுக்காட்டு மக்களை உள்ளடக்கியது. உலக உற்பத்தியிலும் சுமார் 30 விழுக்காட்டை இந்த 15 நாடுகளும் ஒருங்கிணைந்து கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதன் மூலம் உலகிலேயே மிகப் பெரிய சுதந்திர வாணிப உடன்பாடாக ஆர்செப் திகழ்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு சட்டங்களின் அங்கீகாரம் பெறப்பட்டவுடன் இந்த உடன்பாடு முழுமையாக அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை இந்த உடன்பாடு மேலும் வலிமைப்படுத்தும் என்பதோடு, ஆசியாவை பொருளாதார வலிமையின் மையமாகவும் இந்த உடன்பாடு வரும் காலங்களில் உருமாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (நவம்பர் 16) மலேசியப் பங்குச் சந்தையில் பல நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பும் வலுவுடன் உயர்ந்தது.