Home One Line P1 அமானாவின் மேரு சட்டமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

அமானாவின் மேரு சட்டமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

554
0
SHARE
Ad

கிள்ளான் : சிலாங்கூர் மாநில மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமட் பாக்ருல்ராசி முகமட் மொக்தார் (படம்) அமானா கட்சியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் சேர்ந்துள்ளார்.

இதனை அமானா கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அமானா கட்சியிலிருந்து அந்தக் கட்சிதான் தன்னை விலக்கியது என முகமட் பாக்ருல்ராசி தெரிவித்திருக்கிறார்.

பிகேஆர் கட்சியின் பெட்டாலிங் ஜெயா தொகுதியில் முகமட் பாக்ருல்ராசி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முகமட் பாக்ருல்ராசி அமானா கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் இணைகிறார் என நேற்று முதல் தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வந்தன.

முகமட் பாக்ருல்ராசி 2015-ஆம் ஆண்டில் அமானா கட்சியில் இணைந்தார். அதற்கு முன்பாக அவர் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் பொருளாளராக இருந்தார்.

2018 பொதுத் தேர்தலில் அமானா கட்சி சிலாங்கூரில் 9 சட்டமன்றத் தொகுதிகளை நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் கைப்பற்றியது.

இதற்கு முன்னர் ஆண்டின் தொடக்கத்தில் சிலாங்கூரின், சபாக் சட்டமன்ற உறுப்பினர் அகமட் முஸ்தாயின் ஓத்மானையும் அமானா கட்சி நீக்கியிருந்தது.

தற்போது நீக்கப்பட்டிருக்கும் முகமட் பாக்ருல்ராசி நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் இருக்கும் பிகேஆர் கட்சியிலேயே இணைந்திருப்பதால் சிலாங்கூர் சட்டமன்றத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

மேலும் ஏற்கனவே, நம்பிக்கைக் கூட்டணி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கணிசமான பெரும்பான்மை பெற்று வலுவுடன் இருப்பதால் முகமட் பாக்ருல்ராசியின் கட்சி மாற்றம் பெரிதான மாற்றத்தை ஏற்படுத்தாது.