கோலாலம்பூர் : “மரணத்திற்கு பயப்படுகிறார்” என சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் மீது நாடாளுமன்றத்தில் கடுமையானக் கண்டனக் கணை பாய்ச்சிய சரவாக், பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் (படம்) அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க வேண்டும் என்ற நோக்கிலும் நாட்டில் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்ற எண்ணத்திலும் தான் மன்னிப்பு கேட்பதாக தியோங் மேலும் கூறினார்.
கடந்த புதன்கிழமை (நவம்பர் 11) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் கீழ் உரையாற்றியபோது தியோங் இந்த இந்த கண்டனத்தை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தனது கண்டனத்தை மீண்டும் தியோங் வலியுறுத்தினார். தனக்கு கெட்ட நோக்கம் எதுவும் இல்லை என்றும் நூர் ஹிஷாம் தனது கடமை குறித்து பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு கூறியதாகவும் அவர் கூறினார்.
எனினும் நேற்றைய (நவம்பர் 15) அறிக்கையின் வழி அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தான் எல்லைமீறி பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். மருத்துவர்கள், தாதியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார இலாகாவின் தலைமை இயக்குனர் ஆகியோரின் உன்னதமான சேவைகளை குறைத்து மதிப்பிடுவது தனது எண்ணத்தில் எழவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட்-19 தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் தனது நாடாளுமன்ற உரையில் நோக்கம் என தியோங் குறிப்பிட்டார்.
“மருத்துவர்களும் தாதியர்களும், சரவாக் மாநிலத்துக்கும் சபா மாநிலத்திற்கும் அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சுகாதார தலைமை இயக்குனர் மட்டும் அங்கு இதுவரை செல்லவில்லை. அவர் மரணத்திற்கு பயப்படுகிறாரா?” என தியோங் தனது நாடாளுமன்ற உரையின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் மீது எதிர்ப்புகள் எழுந்தன. தனது கண்டனத்தை அவர் மீட்டுக் கொள்ள வேண்டுமென்ற அறைகூவல்கள் விடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்றைய தனது அறிக்கையின் வழி அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அவரது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதற்குப் பதிலளித்த சுகாதார தலைமை இயக்குனர் நூர் ஹிஷாம் ஆகஸ்ட் மாத இறுதியில் தான் நேரடியாக சபா மாநிலம் சென்றதாக கூறினார்.
சுகாதாரத்துறை துணை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங் அண்மையில் சபா மாநிலம் சென்று அங்கு நிலைமையை நேரடியாகக் கண்டறிந்தார் என்றும் நூர் ஹிஷாம் கூறியிருந்தார்.
“எனவே மரணத்துக்குப் பயப்படுகிறேன் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு முஸ்லிம் என்ற முறையில் மரணம் என்பது எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை நான் மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறேன். களத்தில் இறங்கினால் மட்டுமே மரணம் நிகழ வாய்ப்புண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எது முக்கியம் என்றால் நாம் நமது கடமையைப் பொறுப்பாக செய்ய வேண்டியதுதான். நாட்டில் தொற்றுகளின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என நூர் ஹிஷாம் தியோங்குக்கு பதிலளித்திருந்தார்.
அண்மையில் சபா மாநிலம் சென்ற சுகாதாரத் துணை தலைமை இயக்குனர் டாக்டர் சோங் சீ கியோங் அங்கிருந்து திரும்பியவுடன் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார் என்றும் நூர் ஹிஷாம் சனிக்கிழமையன்று (நவம்பர் 14) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.