கோலாலம்பூர் : திரையரங்குகளில் திரையிடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட உள்ளூர் தமிழ்ப் படம் “அதிகாரி”. பாலகணபதி வில்லியம், நந்தினி கணேசன் நடிப்பில் உருவாகியிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழ்நிலையில் நமது உள்ளூர் கட்டணத் தொலைக்காட்சி அலைவரிசையான ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கிறது அதிகாரி.
உள்ளூர் தமிழ் திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கும் நமது மலேசிய இரசிகர்கள் இந்த முயற்சிக்கும் தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என நம்பலாம். முதன் முறையாக நேரடியாகத் தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வண்ணம் திரையீடு காணும் உள்ளூர் தமிழ்ப் படம் இதுவாகும்.
சரி! இனி படத்தின் கதைக்கும் சிறப்பு அம்சங்களுக்கும் வருவோம்!
கதை – திரைக்கதை
ஒரு கயவர் கூட்டத்தைப் பிடிக்கும் முயற்சியில் நடக்கும் ஒரு காவல் அதிகாரியின் மரணம், இன்னொரு அதிகாரியின் தேடுதல் வேட்டையை துவக்குகிறது. இதுவே தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோ FIRST-ல் வெளியாகியிருக்கும் ”அதிகாரி” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
இத்திரைப்படத்தை ஜாங்கிரி புரோடக்ஷன்ஸ் சார்பாக நந்தினி கணேசன் தயாரிக்க, கபிலன் புலேந்திரன் இயக்கியுள்ளார். இவர்களின் கூட்டணியில் மூன்று வருடங்களுக்கு முன்பு ’ஜாங்கிரி’ எனும் நகைச்சுவை திரைப்படம் திரையரங்கில் வெளியாக பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நந்தினி கனேசன், பால கணபதி வில்லியம் நடித்துள்ளனர். பால கணபதியின் தோற்றமும் உடல் மொழியும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது.
கதாநாயகி நந்தினி பல காட்சிகளில் சிறப்பாகவே தனது நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். சோகக் காட்சிகளிலும், அழவேண்டிய காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கூடத் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாலாவின் மகளாக வரும் அந்த சுட்டி சிறுமியிடம் நந்தினி செய்யும் சேட்டைகள் இரசிக்கும்படி காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்திற்கு கர்ணன் ஜி க்ராக் மற்றும் புவணன் நல்ல தேர்வு. இறுதிக் காட்சியில் கர்ணனின் உணர்ச்சிமிக்க நடிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் நம்முடைய பல உள்ளூர் திரைப்படத் தயாரிப்புகளின் ஒளி, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பப் பங்களிப்புகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருந்து வருகிறன.
“அதிகாரி”-யிலும் அதில் எந்த ஒரு குறையும் சொல்வதற்கு இல்லை. ரமேஷ்வரன் அண்ணாமலையின் ஒளிப்பதிவும் முரளி கிருஷ்ணனின் படத்தொகுப்பும் இத்திரைப்படத்திற்கு தேவையான அளவு உதவியிருக்கிறது. சில இரவு நேரக் காட்சிகளில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சமேஷன் மணிமாறனின் பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் விறுவிறுப்பூட்டுகிறது.
ஃபீனிக்ஸ் தாசனின் வரிகளில் “அகலாதே விலகாதே” பாடல் கேட்பதற்கு இனிமை. பாடல் காட்சியமைப்பு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
இத்திரைப்படத்தில் “பொம்பெ” எனும் அரிய வகை நோயைப் பற்றி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கும், மருத்துவம் வியாபாரம் ஆகியிருப்பதை திரைப்படத்தில் பதிவு செய்ததற்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். திரைக்கதையையும் காட்சியமைப்புகளிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இத்திரைப்படம் இன்னும் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
வழக்கமாக தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கு செல்வதற்கு 100 ரிங்கிட்டுக்கு மேல் செலவாகும். ஆனால் கொரொனா பாதிப்பால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், வெறும் 15 ரிங்கிட்டுக்கு இத்திரைப்படத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தாற்போல் பார்த்து மகிழலாம்.
அதே வேளையில் உள்ளூர் கலைஞர்களுக்கும், நமது நாட்டின் கலையுலகத்தினருக்கும் ஆதரவுக் கரம் நீட்டிய பெருமையும் நமக்குக் கிட்டும்.