சிங்கப்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) முதல் தொடங்கவிருந்த சிங்கப்பூர், ஹாங்காங் இடையிலான தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மீண்டும் விமானப் பயணத்தை அதிகரிக்கும் வண்ணமும், கொவிட்-19 பிரச்சனைகளின் பாதிப்பின்றி, ஹாங்காங்- சிங்கப்பூர் இடையிலான தடையற்ற, சுமுகமான விமான போக்குவரத்து இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்படவிருந்தது.
எனினும், திடீரென நேற்று சனிக்கிழமை அந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. “ஏர் டிராவல் பபள்” (air travel bubble) என்ற பெயரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்தத் திட்டம் தொடங்கப்படவிருந்த 24 மணி நேரத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடுகளுக்குமிடையில் கொவிட்-19 காரணமாக பயணிகள் தனித்து வைக்கப்படும் பிரச்சனையின்றி விமானப் போக்குவரத்து சுமுகமாக நடைபெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
ஹாங்காங்கில் நேற்று சனிக்கிழமை 43 புதிய கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஹாங்காங்கைப் பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஒரு நாள் தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
பயணிகள் தனித்து வைக்கப்படும் பிரச்சனையின்றி பயணம் செய்வதன் மூலம் இந்த இரண்டு ஆசிய வணிக நகர்களுக்கும் இடையில் சுற்றுலாத்துறையும் வணிகப் பரிமாற்றமும் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் இந்த இரண்டு நகர்களுக்கிடையில் ஒரு நகரில் இருந்து ஒரு விமானப் பயணம் வீதம் மேற்கொள்ளப்படும். அதில் அதிகபட்சமாக 200 பயணிகள் இருப்பர். பின்னர் அந்தப் பயணங்கள் ஒரு நாளைக்கு ஒரு பயணம் என்பதிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு பயணங்கள் என்ற அளவில் அதிகரிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக கடந்த 14 நாட்களில் பயணிகள் வேறு எந்த நாட்டுக்கும் பயணம் செய்திருக்க கூடாது. அதே வேளையில் கொவிட்-19 பரிசோதனையும் கட்டாயமாக மேற்கொள்ளப்படும். சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் சென்றடைந்ததும் பயணிகளுக்கு அவர்களை அடுத்த 14 நாட்களுக்குத் தனித்து வைப்பது அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்னும் நிபந்தனையோ விதிக்கப்படாது.
பரிசோதனை முறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கொவிட்-19 தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரையில் ஹாங்காங் 5,561 தொற்றுகளைப் பதிவுசெய்து 108 மரணங்களைச் சந்தித்தது. சிங்கப்பூர் 58 ஆயிரம் தொற்றுகளையும் 28 மரணங்களையும் பதிவு செய்தது.