கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் எட்டு புதிய கொவிட் -19 தொற்றுக் குழுக்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
சிலாங்கூரில் புன்சாக் கலக்சி தொற்றுக் குழு, சபாவில் புக்கிட் புனாய் தொற்றுக் குழு, கோலாலம்பூரில் பெர்மாய், மாதாஹரி மற்றும் லாவுட் கட்டுமான தளக் தொற்றுக் குழுக்கள், ஜோகூரில் சஹாயா மஹ்சூரி தொற்றுக் குழு, பேராக்கில் செரி தாசிக் தொற்றுக் குழு மற்றும் பகாங்கில் இன்டென் தொற்றுக் குழு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, இன்றைய தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை அடுத்து, நாட்டில் மொத்தமாக 87,913 சம்பவங்கள் பதிவாகின. இது சீனாவில் பதிவு செய்யாப்பட்ட மொத்த தொற்று சம்பவங்களைக் காட்டிலும் அதிகமானது.
கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய இந்த தொற்று உலகெங்கிலும் பரவத் தொடங்கி, மில்லியன் கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர்.
மலேசியாவில் தற்போது, மூன்றாவது அலை ஏற்பட்டு சராசரியாக தினமும் 1,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அதே போல், தினமும் ஒரு மரண சம்பவமும் பதிவாகி விடுகிறது. நாட்டில் தற்போது 429 பேர் இந்த தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.