Home One Line P2 நரேந்திர மோடி விவசாயிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்

நரேந்திர மோடி விவசாயிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்

539
0
SHARE
Ad

புதுடில்லி : புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக புதுடெல்லியில் திரண்டு போராடி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 26) வானொலி, தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நரேந்திர மோடி தனது உரையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்திய அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் வேளாண்மை சட்டங்களை எதிர்த்து புதுடில்லியின் போராடி வருகின்றனர். நவம்பர் 26 முதல் இந்த போராட்டங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன

#TamilSchoolmychoice

புதிய வேளாண்மை சட்டங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் என்றும் இடைத்தரகர்களை முற்றாக ஒதுக்கும் என்றும் அரசாங்கம் விவசாயிகளுக்கு தொடர்ந்து உறுதி அளித்து வந்திருக்கிறது. ஆனால் விவசாயிகளும் விவசாய சங்கங்களும் கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய சட்டங்கள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உணவுப் பொருட்களின் விலைகளை பெரிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நிலைமை ஏற்படும் என்றும் கூறிவருகின்றனர்.

விவசாயிகளின் ஐயப்பாடுகளை, சரியல்ல என்று விளக்கிய நரேந்திர மோடி அரசியல் நோக்கங்களுக்காக விவசாயிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தரப்புகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

விவசாயிகளின் ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மோடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த ஆண்டு  90 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக  2.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நேரடி நிதி உதவிகளை மோடி வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு  சிறு விவசாயியும்  தலா 6 ஆயிரம் ரூபாய் தொகையை ஓராண்டில் நான்கு தவணைகளாக பெறுவர்.

நேற்றைய உரையின் போது பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளுடன் காணொலி வழியான உரையாடலையும் மோடி நடத்தினார்.

1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் சுமார் 70 விழுக்காட்டினர் விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்தியப் பொருளாதாரத்தில் 15 விழுக்காடு விவசாயம் சார்ந்ததாகும்.

கடந்த சில வாரங்களில் அரசாங்கம் விவசாய அமைப்புகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் இதுவரையில் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.